கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு மார்ச்சில், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கின.இதனையடுத்து, நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதை சரி செய்ய, ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ், 27.1 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவித் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தற்போது அதிதீவிரம் அடைந்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த நிடி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார், ‘கொரோனா பரவலை முற்றிலுமாக ஒழிக்க, மத்திய அரசு மிகவும் தீவிரமாக போராடி வருகிறது. சில நாடுகளில் இருந்து பரவி வரும் வீரியம் மிக்க புதிய வகை வைரசினால், இன்றைய நிலை மிகவும் மோசம்அடைந்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்புகள், கடந்த ஆண்டைவிட அதிகரித்து வருகிறது. எனவே, பல மாநில அரசுகள் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன. இவை, சேவை துறைகள் மீது நேரடியாகவும் நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் மீது மறைமுகமாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும். நுகர்வோர் துறை, முதலீடுகள் துறை உள்ளிட்ட பல துறைகள் நிச்சயமற்ற தன்மையை சந்திக்கும். இதை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது அலையின் பாதிப்புகளை முழுவதுமாக ஆய்வு செய்த பின், நிதியுதவித் திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் முடிவு எடுக்கும். தேவையான நேரத்தில், நிதி உதவி திட்டங்கள் நிச்சயமாக அறிவிக்கப்படும்’ என தெரிவித்தார்.