பெர்ல் துறைமுகத்தை தளமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஏவுகணை தாங்கி போர் கப்பலான யு.எஸ்.எஸ். ஹாப்பருக்கு ஏப்ரல் 2020ல் முதல் பெண் தளபதியாக கேத்ரின் டாவ்லி என்பவர் நியமிக்கப்பட்டார். அமெரிக்க கப்பற்படை வரலாற்றில் இந்த பெரிய பொறுப்பை ஏற்ற முதல் பெண்மணியும் இவர்தான். ஆனால், சமீபத்தில் இவரை அந்த பொறுப்பில் இருந்து கப்பற்படை அதிரடியாக நீக்கியது. ஏனெனில் அவர் மீதான கப்பற்படை ஊழியர்களின் நம்பிக்கையின்மையே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. கேத்ரின் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. எனினும், அவரது ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. மேலும், படைக் குழுவினரின் மன உறுதியும் ஒரு பெரிய காரணியாக இதில் இருந்தது என்பது மறுப்பதற்கில்லை என யு.எஸ். பசிபிக் கடற்படை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜேம்ஸ் ஆடம்ஸ் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அமெரிக்கக் கடற்படையினரின் மன உறுதி குலைந்துவிட்டது. இது அனைவருக்கும் மிகவும் கவலை அளிக்கிறது. இந்த நிலையில், கேத்ரினால் படையை சிறப்பக வழி நடத்துவது இயலாது என கப்பல் மாலுமி ஒருவர் தெரிவித்ததாக பத்திரிகை செய்தியொன்று தெரிவிக்கிறது.