தொன்மைத் தமிழ் இலக்கிய வகையிலான சங்க நூல்களில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் முதன்மையானவை. இவற்றுள் தொகைநூல்கள் எட்டுள் ஒன்று பரிபாடல். இதன் காலம் பொதுயுகம் 3-ம் நூற்றாண்டாக இருக்கலாம். மதுரை மூதூரை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டவையே பரிபாடல்கள்.
பரிபாடலில் ஆரம்பத்தில் தொகுக்கப் பட்டவை 70 பாக்கள்.. அவற்றுள் 22 மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றை 1900-ல் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், பனையோலச் சுவடிகளிலிருந்து மீட்டு முதன் முறையாக அச்சேற்றினார். 25 அடிகள் முதல் 400 அடிகள் வரை கொண்ட பரிபாடல்கள் உண்டு. இதற்கு பரிமேலழகர் எழுதிய உரையே உ.வே.சா.வால் பதிப்பிக்கப்பட்டது.
இந்தப் பாடல்கள் ஒருவரால் எழுதப் பட்டவை அல்ல, கீரந்தை, கடுவன் இளவெயினி, மையோடக்கோவன், நல்லந்துவன், குன்றம்பூதன், கரும்பிள்ளைப் பூதன், கேசவன், இளம்பெருவழுதி, நல்லழிசி, குன்றம்பூதன், நப்பண்ணன், நல்லச்சுதன், நல்லெழுநி, நல்லழுதி ஆகிய 14 புலவர்களால் பாடப்பட்டவை.
அதிலும், பாலையாழ் பண்ணில் முதல் 12 பாடல்களும், நோதிரப் பண்ணில் அடுத்த 5 பாடல்களும், காந்தாரப் பண்ணில் கடைசி 5 பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற 4 வகைப் பாக்களிலும் அடங்காது, குதிரை நடையின் தாள லயத்துடன் தவ்விச் செல்லும் பாங்குடையதாகப் பரிபாடல் விளங்குகிறது. பரிபாடல் மூலத்தில் மதுரை மாநகர் (4), வையை நதி (26), அழகர்கோயிலில் வீற்றிருக்கும் திருமால் (8), திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் செவ்வேள் (31), மதுரையை ஆளும் கொற்றவை (1) ஆகியோர் குறித்த பாடல்கள் இருந்ததாக பழங்காலச் செய்யுளால் அறிகிறோம். அவற்றுள் திருமால் (6), செவ்வேள் (8), வையை (8) ஆகியவை குறித்த 22 பாடல்களே கிடைத்துள்ளன.
கிடைத்த பாடல்களை ஆராயும்போது, பழந்தமிழர் சமய வழிபாடு எங்ஙனம் இருந்தது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம் ஆகிய ஆறு வழிபாடுகளும் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அதுபோலவே சைவ, வைணவ பேதம் அக்காலத்தில் சற்றும் இல்லை என்பதையும் இப்பாடல்களிலிருந்து அறியமுடிகிறது.
பிற தமிழ் இலக்கியங்கள் போலல்லாது, மதுரை, அதைச் சூழ்ந்துள்ள பரங்குன்றம், மாலிருஞ்சோலை, அங்கு பாயும் வைகை ஆகியவை குறித்து மட்டுமே பாடப்பட்டது பரிபாடல். அதிலும், இப்பாடலின் துவக்கமே திருமால் வாழ்த்தாக வருகிறது. பரிபாடலில் வையை (6,7,10,11,12,16,20,22) குறித்த பாடல்களுள் காமச்சுவை மிகுந்தும், திருமால் (1,2,3,4,13,15), செவ்வேள் (5,8,9,14, 17,18,19,21) குறித்த பாடல்களில் பக்திச் சுவையும் மிகுந்தும் காணப்படுகின்றன. குறிப்பாகத் திருமால் குறித்த பாடல்களுள் தத்துவ விசாரணையும், நால்வேதங்களின் தாக்கமும் சிறப்பாக வெளிப்படுகின்றன. இது, அக்காலத்தில் நாடு முழுவதும் சீராக நிலவிய கலாச்சார ஒருமையுணர்வை உறுதிப்படுத்துகிறது.
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்
அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும்,
நிலனும், நீடிய இமயமும் நீ.
(பரிபாடல்-1: 40- 51)
-என்ற பாடலில் வரும் திருமாலின் இலக்கணங்கள், இன்று நாம் போற்றிப் பரவும் கண்ணனின் அம்சங்களே!
மூன்றாம் பாடலில் புலவர் கடுவன் இளவெயினி மாலவனின் விஸ்வரூப தரிசனத்தையும், சாமவேதத்தில் நாராயண துதியையும் விளக்குகிறார்:
மாஅயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்!
(பரிபாடல்-3: 1- 10)
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே
(பரிபாடல்- 3: 63- 72)
அதுபோலவே, புலவர் நல்லச்சுதனர் பாடிய செவ்வேள் வணக்கப் பாடலிலும் கௌமார நெறியைக்கண்டு உவக்கிறோம்.
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை;
ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை;
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, ‘நின் அடி உறை
இன்று போல் இயைக!‘ எனப் பரவுதும்-
ஒன்றார்த் தேய்த்த செல்வ! நிற் தொழுதே.
(பரிபாடல்-21: 66- 70)
வையையைப் பாடும் 11-வது பரிபாடலில் புலவர் நல்லந்துவனார், அப்பாடல் பாடப்பட்ட காலநிலையைக் – கோள்களின் கோச்சார நிலையைக் குறிக்கும் வகையில் – பதிவு செய்திருப்பது சிறப்பு. இதுவே பரிபாடலின் காலத்தைக் கணிக்க உதவியாக உள்ளது. வானியல் அறிவை வாழ்வியலில் பயன்படுத்துவதும் ஹிந்துத்துவ பண்பாடல்லவா? புதுமழை பொழிந்து வையையில் பெருக்கெடுத்த வெள்ளத்தின் காலநிலையை அக்கால வானியல் நிலையுடன் கூறியிருக்கும் பாங்கு இதோ…
‘விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல்!
(பரிபாடல்-11: 1- 15)
இவ்வாறாக, பாகவதத்தில் வரும் கதைகள் – திருமால் குறித்த பாடல்களிலும், ஸ்கந்த புராணத்தில் வரும் கதைகள் – செவ்வேள் குறித்த பாடல்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளன. சூரனை வதைத்த முருகனின் திறமும், தேவரைக் காத்த மாலவன் பெருமையும் பல பாடல்களில் பதிவாகியுள்ளன. ஆங்காங்கே யானைமுகன், சிவன், கொற்றவை குறித்த தகவல்களும் உள்ளன. மாயோனின் அவதாரங்கள், கருடக்கொடி, சங்கு, சக்ராயுதங்களின் சிறப்பு குறித்தும், சேயோனின் கூர்வேல், சேவற்கொடி, மயில் வாகனம் ஆகியவை குறித்தும் அழகிய வர்ணனைகள் இப்பாடல்களுள் உண்டு.
வையை நதி பற்றிய பாடல்களிலுங்கூட அக்காலப் பண்பாட்டின் தாக்கமும், வழிபடு தெய்வங்களின் விளக்கமும் வருகின்றன. அவையாவும் ஹிந்து சமயம் எனச் சொல்லும் வழிபாட்டு முறையில் இலங்குபவையே. அதுமட்டுமின்றி, ஹிந்துத்துவத்தின் இயல்பான மதுரை மாநகர வாழ்த்தும் நதி வணக்கமும், பரிபாடலை பழமையான ஹிந்து இலக்கியமாகவே காட்டுகின்றன.
பழந்தமிழரின் சமயம்யாது என்ற கேள்வியை எழுப்பி மக்களைக் குழப்ப முயலும் தெருக்கூட்டம் ஒன்று தமிழகத்தை 60 ஆண்டுகளாகப் பாழ்படுத்தியுள்ளது. பரிபாடல் ஒன்றே போதும், பழந்தமிழரின் சமயம் சனாதனமாகிய ஹிந்து சமயமே என்பதை நிரூபிக்க. இதனை ஹிந்து நம்பிக்கையாளர் திருக்கூட்டம் நல்ல முறையில் பயன்படுத்துவது அவசியம். பரிபாடலை முழுவதும் கற்றாலே, நாப்பிளக்கப் பேசும் நாத்திகக் கூட்டத்தின் செருக்கை அறுக்க முடியும்; நமது பாரம்பரியச் சிறப்பை ஹிந்துத் தமிழருக்கும் உரைக்க முடியும். அதன்மூலமாக பாரதத் தேசத்தின் ஒருங்கிணைந்த மாநிலமே தமிழகம் என்பதையும் அறிவிலிகளுக்கு உணர்த்த முடியும்.