துணைவேந்தர் நியமனம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை துணைவேந்தராக, சந்தோஷ்குமாரை நியமித்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். இவர் துணைவேந்தராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார். பேராசிரியர் பணியில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ள சந்தோஷ்குமார், மாநில சட்டக் கல்வி இயக்குநராக 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தேசிய, சர்வதேச ஆய்விதழ்களில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். சென்னை, கோவை, திருச்சி, நெல்லை சட்டக் கல்லூரிகளின் முதல்வர், பல்கலைக்கழக துணைவேந்தர் அமைப்புக் குழு தலைவர், செனட், சிண்டிகேட் உறுப்பினர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சட்டக் கல்வி இயக்குநராக இருந்தபோது, புதிதாக 11 சட்டக் கல்லூரிகள் உருவாக காரணமாக இருந்தவர் இவர். 11 புதிய முதுகலை சட்டப் படிப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார். சட்டக் கல்லுாரி உட்கட்டமைப்பு வசதிகளை, ரூ. 816 கோடியில் மேம்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு, புதிய ஆட்சி வரும் வரை காத்திருக்காமல், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தராக, சந்தோஷ்குமாரையும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் செல்வகுமாரையும் ஏன் அவசர அவசரமாக ஆளுநர் நியமனம் செய்தார் என வழக்கம்போல வீரமணியும், தி.மு.க தலைவர்களும் புலம்பியுள்ளனர்.