நாட்டில் பல அரசியல் கட்சிகள் தேர்தல் வந்தால்தான் மக்களையே நினைத்துப் பார்க்கின்றன. அப்போதும் மக்களுக்கு நீண்டநாள் பயனளிக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து யோசிக்காமல், கவர்ச்சித் திட்டங்களை அள்ளிவீசி நாட்டையும் மக்களையும் ஏதோ ஒருவிதத்தில் பலவீனப்படுத்துகின்றன. ஆனால், தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை செயல்படுத்தும் மத்திய மோடி அரசு கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
முத்ரா கடன் திட்டம்
மத்திய அரசு 2015-ம் ஆண்டு சிறு, குறு தொழில் முனைவோரின் நலனுக்காகவும் அவர்களின் ஆரோக்கியமான நிதி நிர்வாகத்திற்காகவும் அறிமுகப்படுத்திய திட்டமே முத்ரா யோஜனா. இது சிசு, கிஷோர், தருண் என மூன்று பிரிவுகளைக் கொண்டது. சிசுவில் ரூ 50,000 வரையும், கிஷோரில் 5 லட்சம், தருண் திட்டத்தில் 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலும் கடன்பெறலாம். முத்ரா திட்டத்தில் மொத்தம் கடன் பெற்றவர்களுள் 68 சதவீதத்தினர் பெண்களே. அதாவது, பெண்களுக்கு 19.04 கோடிக் கணக்குகள் மூலம் 6.36 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முன்னணி வகிக்கிறது.
பாரதத்தில் தயாரிப்போம்
‘மேக் இன் இந்தியா’ எனப்படும் பாரதத்தில் தயாரிப்போம்’ திட்டம் 2014ம் ஆண்டு, செப்டம்பர் 25-ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது, குண்டூசி முதல் ஆயுதத் தளவாடங்கள்வரை சுயசார்பை அடைவது, அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதே இதன் இலக்கு. இந்த நெருக்கடியான கொரோனா காலகட்டத்தில் முகக்கவசம், வெண்டிலேட்டர், கிருமி நாசினி என எந்தப் பற்றாக்குறையும் இன்றி பாரத நிறுவனங்கள் உற்பத்தி செய்து, பாரதத்தில் போக, உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தன என்பதே இதன் வெற்றிக்கான சான்று.
பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா
இது தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டம். கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கஎந்தப் பிணையமும் இன்றி ரூ.10,000 வரை கடன்பெற இத்திட்டம் வழிவகுக்கும். ஆன்லைன், பொதுச் சேவை மையம், நகராட்சி அலுவலகம், வங்கிகளில் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்யலாம். உரிய நேரத்தில் தவணையைத் திரும்பச் செலுத்துபவர்களுக்கு 7 சதவீத வட்டித் தள்ளுபடி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாதத்திற்கு ரூ.100 வீதம் பணப்பயன் வசதியும் உள்ளது. நாடு முழுவதும் 50 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க 600 கோடிவரை ஒதுக்கப் பட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (ஆயுள் காப்பீட்டுத் திட்டம்) வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 50 வயதுவரை உள்ள அனைவருக்கும் பொருந்தும். ஐம்பது வயது நிறைவடைவதற்குமுன் இத்திட்டத்தில் சேருபவர்கள் தொடர்ந்து வருடத்துக்கு ரூ.330 பிரீமியம் செலுத்தி வந்தால் 55 வயதுவரை ஆயுள் காப்பீடு உண்டு. பிரீமியதாரர் துரதிர்ஷ்ட வசமாக இறக்கும் பட்சத்தில் ரூ 2 லட்சம் இழப்பீடு உண்டு.
இலவச எரிவாயுத் திட்டம்
பெண்களுக்குத் தொழில் வாய்ப்புகள் மட்டுமல்ல, ஆரோக்கியமும் முக்கியம் என்னும் நோக்குடன் கொண்டு வரப்பட்டதே இலவச எரிவாயு இணைப்புத் திட்டம் (உஜ்வாலா யோஜனா). ஏழைப் பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் 2016ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் 8 கோடி இலவச எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து அது எட்டப்பட்டுள்ளது. இந்த இணைப்பு எண்ணிக்கை கடந்த 6 ஆண்டுகளில் 14 கோடியிலிருந்து 28.45 கோடியைத் தொட்டுள்ளது.
மின்சார சிக்கனத் திட்டங்கள்
பழைய குமிழ் விளக்குகளின் உபயோகத்தால் அதிக மின்சாரம் வீணாவதைத் தடுக்க எல்.இ.டி பல்புகளை விநியோகிக்க மத்திய அரசு பல ஊக்குவிப்புத் திட்டங்களைக் கொண்டுவந்தது. அதன்படி, 36.69 கோடி எல்.இ.டி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் 47.65 பில்லியன் கிலோவாட் மணி(kilowatt-hour) மின்சாரம் சேமிக்கப்பட்டது. 1.14கோடி எல்.இ.டி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் குறைந்தது.
பெண், ஆண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம்
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக ‘சுகன்யா சம்ரிதி’ எனும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தைப் பாரத அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தை வரை, அவர்களின் பெயரில் பெற்றோரோ, பாதுகாவலரோ தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கலாம். பொன்மகன் சேமிப்புத் திட்டம் ஆண் குழந்தைகளுக்காகக்கொண்டு வரப்பட்ட திட்டம்.
பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா
‘பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா’வின் கீழ் விவசாயிகளுக்கு 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 3000 அல்லது வருடத்துக்கு 36,000 வழங்கப்படுகிறது. 18 முதல் 40 வயதுக்குட்பட்ட எந்தவொரு விவசாயியும் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ளலாம். இணையும் காலத்தில் அவர்களின் வயதுக்கேற்ப மாதப் பங்களிப்பு ரூ.55 முதல் ரூ.200 வரை 60 வயது வரையில் செலுத்த வேண்டும். 18 வயதில் சேர்ந்தால் ரூ.55, 25 வயதில் ரூ.80, 30 வயதில் ரூ.105, 40 வயதில் சேர்ந்தால் ரூ.200. இதில் சந்தாதாரர், தான் செலுத்திய மொத்த சந்தாவையும் ஒன்றரை ஆண்டுக்குள் ஓய்வூதியமாகவே பெற்றுவிடுவார். எனவே, சந்தா என்பது மக்களின் மிகமிகச் சிறிய பங்களிப்பே. பயனாளிகள் பென்ஷன் பெறும் காலத்திலேயே இறந்துவிட்டால், அவரின் மனைவி அல்லது கணவருக்கு 50 சதவீதப் பென்ஷன் வழங்கப்படும்.
பிரதான் மந்திரி வித்யாலஷ்மி கார்யக்கிரம்
இத்திட்டத்தின் மூலம் கல்விக் கடன்கள் உதவித் தொகையைக் கண்காணிக்க நிதியுதவி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கல்வித் தரத்தை உயர்த்த பண்டித மதன்மோகன் மாளவியா இயக்கத்தின் மூலம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி. உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி, அளிக்க உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள், ஆசிரியர்களை வரவழைக்க உலகளாவிய கல்விக்கான முயற்சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்வயம் திட்டத்தின்கீழ் ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கல்விக்குத் தேவையான புத்தகங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த ‘இ-ந்நூலகம் ஷாலா தர்பன்’ திட்டத்தின்மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்களை அவர்களது பெற்றோர் கண்காணிக்க வழிவகை செய்தல். பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த உதான் திட்டம். வடகிழக்கு மாநிலங்களில் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பயிற்சியை மேற்கொள்ள இ – ஷான் விகாஸ் திட்டம். பாரம்பரிய கலை கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் திறனை மேம்படுத்த உஸ்தாத் திட்டம்.
திறன் மேம்பாடு (ஸ்கில் இந்தியா)
தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) மூலமாக இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கும் முன்னோடித் திட்டம் ஜூலை 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகமயமாதல், அறிவு, போட்டி ஆகியவை அதிகரித்துவரும் நிலையில், வளர்ந்த, வளரும் நாடுகளில் அதிகரித்துவரும் திறன் தொழிலாளர்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் முகமாகக் கொண்டுவரப்பட்ட திட்டம். இதில் 1400க்கும் அதிகமான தொழிற்பயிற்சிகள் உள்ளன. 40 கோடி இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி வழங்குவதே இலக்கு. இதுவரை 1.07 கோடிபேருக்குப் பயிற்சி அளித்து இலக்கு அடையபட்டுள்ளது. கொரோனா சமயத்தில் மட்டும் தமிழகத்தில் 4 லட்சம்பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
-தமிழ்த்தாமரை வி.எம். வெங்கடேஷ்