மக்கள் நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், உயர்கல்வி நிலையங்களை அமைத்தல் ஆகியவற்றில் தமிழகம் நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அதிமுக ஆட்சி மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு இணக்கமாக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் கூட கிடைக்காத வாய்ப்பாக ஒரே ஆண்டில் (2020ல்) தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் ரூ. 3,575 கோடி மதிப்பீட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் துவக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றால்…!. இதன் மூலமாக 1,650 மருத்துவப் படிப்பு இடங்கள் அதிகமாகக் கிடைக்க உள்ளன. (பாரதம் சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் வரை 22 அரசு மருத்துவ கல்லுாரிகளே தமிழகத்தில் இருந்தன).
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள்:
கல்வித் துறையில் ஏற்கனவே வளர்ந்த மாநிலமாக இருந்தாலும், மருத்துவக் கல்வி இடங்களை தேசிய அளவில் அதிகரிக்க வேண்டுமானால், அதற்கு ஏற்ற இடமாக தமிழகத்தையே மத்திய அரசு கவனத்தில் கொண்டிருப்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. அதற்கான கல்விச் சூழலையும், உள்கட்டமைப்புச் சூழலையும் தமிழகத்தில் வலுப்படுத்துவது எளிது என்ற காரணத்தால் தான், பாஜக ஆளும் மாநிலங்களையும் கூட தவிர்த்து, ஒரே ஆண்டில் இவ்வளவு மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் துவங்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
மதுரையில் எய்ம்ஸ்
இது தவிர, மதுரையில் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனை துவங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்து, அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
பொலிவுறு நகரம் திட்டம் இனி மாநிலத்தில் 11 சூப்பர் சிங்கப்பூர்கள்!
மக்கள் தங்கள் தேவைகளுக்காக நகரங்களுக்கு குடிபெயர்ந்ததால் நெருக்கடி அதிகரித்தது. குடியிருப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புறநகர் விரிவாக்கத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி, கூட்ட நெரிசல், வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், சாலைகள் பராமரிப்பு, சுகாதாரம் ஆகியவற்றுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காண வேண்டிய சூழல் உருவானது. கம்ப்யூட்டர், இன்டர்நெட், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் பயன்பாடு காரணமாக ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற நவீன உள் கட்டமைப்புகள் கொண்ட நகர்ப் பகுதிகளுக்கான தேவை எழுந்தது. அதன் அடிப்படையில், மத்திய அரசு அகில பாரத அளவில் 100 நகரங்களைத் தேர்வு செய்து 2015–16 முதல் 2019–20 வரையிலான 5 நிதியாண்டுகளுக்குள் அவற்றை பொலிவுறு நகரங்களாக உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கான பல்வேறு கட்டத் தேர்வுகளில் தமிழக அளவில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு ஆகிய 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திற்கும் மத்திய அரசு தமிழக அரசும் தலா ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கின்றன. இந்த 11 நகரங்களில் ரூ. 10,440 கோடி மதிப்பீட்டில் 357 திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 28 உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர், கழிவுநீர் அகற்றும் மேலாண்மை, மழை நீர் வடிகால் வசதி, போக்குவரத்து வசதி, பசுமை / திறந்தவெளி பகுதிகள் ஏற்படுத்துதல் போன்றவற்றை உறுதி செய்யும் ‘அம்ருத்’ திட்ட செயலாக்கத்தில் தமிழகம் 13–வது இடத்திலும், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட செயலாக்கத்தில், 120.72 புள்ளிகளுடன் 7–வது இடத்திலும் உள்ளது.
சென்னை, தியாகராயநகரில் நடைபாதை வளாகங்கள் அமைக்கும் பணியும், கோவையில் 8 நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளும், மதுரையில் சுற்றுலா சார்ந்த கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களும், திருச்சியில் மலைக்கோட்டை சுற்று வட்டார மேம்பாட்டுத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போன்று சேலத்திலும் தூத்துக்குடியிலும் பழைய பேருந்து நிலையங்களைச் சீரமைக்கும் பணிகளும், திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவில் சுற்று வட்டார மேம்பாட்டுத் திட்டமும், ஈரோட்டில் பெரும்பள்ளம் ஓடை மேம்பாட்டுத் திட்டமும், திருப்பூரில் ஆற்று முகத்துவார மேம்பாட்டுத் திட்டமும், வேலூரில் புதிய பேருந்து நிலைய வளர்ச்சித் திட்டமும், தஞ்சையில் பாரம்பரிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டமும் பொலிவுறு நகரங்கள் திட்டத்தால் கிடைத்துள்ள பயன்கள். இந்தத் திட்டங்களுக்காக மொத்தம் 11,320.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முத்ரா கடன் திட்டம் உங்களுக்கு ’தொழில்முனைவோர்’ முத்திரை!
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி 2015 ஏப்ரல் 8 அன்று தொடங்கி வைத்தார். ரூ. 10 லட்சத்துக்கும் குறைவாக கடன் தேவைப்படும் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. முத்ரா திட்டம் குறுந் தொழில் முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் 3 வகைகளில் கடன்களை வழங்குகிறது. அதன் படி, சிசு திட்டம் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் வரையும், கிஷோர் திட்டம் மூலம் 5 லட்சம் ரூபாய் வரையும், தருண் திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் வரையும் கடன் பெறலாம்.
அனைத்து வகையான உற்பத்தி, சேவை இவற்றுடன் வியாபாரம் செய்வோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். கடன் பெற 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த வங்கியிலும் வாராக் கடன் தொகையை வைத்திருக்கக் கூடாது. வாங்கும் கடனை 5 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம். வங்கிகளுக்குத் தகுந்தவாறு கடனுக்கான வட்டி வீதம் மாறுபடுகிறது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 16 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் 2015–16ல் 47 லட்சத்து 81 ஆயிரத்து 567 பேரும், 2015-–16 ல் 53 லட்சத்து 9 ஆயிரத்து 857 பேரும் முத்ரா திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். 2017-–18ல் 58 லட்சத்து 60 ஆயிரத்து 165 பேருக்கும், 2018-–19ல் 57 லட்சத்து 34 ஆயிரத்து 180 பேருக்கும் முத்ரா திட்டம் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
‘அம்ருத்’ திட்டம் “ஊருணி”களை உருவாக்குவோம்
மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அளித்த தகவலில், ‘அம்ருத்’ எனப்படும் அடல் நகர்ப்புற மறுசீரமைப்பு / மாற்றத்திற்கான திட்டத்திற்காக தமிழ்
நாட்டிற்கு அதிகபட்சமாக 11,441.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்காக 4,763.59 கோடியும், தமிழக அரசின் பங்காக 2,300.44 கோடி ரூபாயும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்காக 4,377.31 கோடி ரூபாயும் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை மூலம் தமிழகத்தில் 445 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஈரோடு, திருப்பூர், ஓசூர், வேலூர், ஆம்பூர், கோவை, மதுரை, ராஜபாளையம், நாகர்கோவில், கும்பகோணம் ஆகிய நகரங்களில் 18 பெரிய குடிநீர் விநியோகத் திட்டங்கள் ரூ. 6,495.75 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையை அடுத்த நெம்மேலியில் 15 கோடி லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் நிலையமும், சவ்வூடு பரவல் முறையிலான இரண்டு துணை சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இது தவிர, சென்னையில் மாத்தூர், மடிப் பாக்கம், ஜல்லடியான்பேட்டை, உத்தண்டி, வளசரவாக்கம் ஆகிய இடங்களிலும் குடிநீர் விநியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. கோயம்புத்தூரிலும் அம்ருத் திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யவும் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான குடிநீர் வழங்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி, வேலூர் மாநகராட்சிகளிலும், ராஜபாளையம் / ஆம்பூர் நகராட்சிகளிலும், வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியிலும் ரூ. 4,713.21 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அத்துடன், அம்ருத் நகரங்களில் 409 பசுமைவெளி மேம்பாடு / பூங்கா அமைக்கும் திட்டங்களும் 232.38 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், தமிழ்நாட்டில் ரூ. 27,556.92 கோடி செலவில் 5,97,025 குடியிருப்புகள்/ வீடுகள் கட்டப்படுகின்றன. இதில் 22,115 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 46,435 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன என்று அரசு தெரிவித்துள்ளது.
‘ஜல்ஜீவன்’ திட்டம் குழாயில் வீடுதேடி வரும் குடிநீர்!
ஜல்ஜீவன் திட்டம் மூலம் 3.5 கோடி கிராம வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024 க்குள் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்க ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2019, ஆகஸ்ட் 15 அன்று தொடங்கி வைத்தார். தற்போது 3.53 கோடி கிராம வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019, ஆகஸ்ட் 15 அன்றைய நிலவரப்படி, மொத்தம் இருந்த 18.93 கோடி கிராம வீடுகளில், 3.23 கோடி (17 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளால், தற்போது 3.53 கோடி வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்க உதவியுள்ளது.
மேலும் 52 மாவட்டங்கள், 77 ஆயிரம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு உள்ளது. தற்போது 6.76 கோடி (35.24 சதவீதம்) கிராம வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், கடந்த ஆண்டு தமிழகத்திற்கு 13.86 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்க ரூ. 373.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 373.10 கோடி வழங்கப்பட்டது. மாநில அரசு இந்த ஆண்டு மார்ச் வரை ரூ. 114.58 கோடியை இதற்காகப் பயன்படுத்தியுள்ளது. 2020-–21 நிதியாண்டில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 917.44 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 1.27 கோடி கிராமப் புற வீடுகளில், 21.85 லட்சம் வீடுகளில் ஏற்கனவே செயல்படும் வீட்டுக் குழாய் இணைப்புகள் உள்ளன. இந்த ஆண்டு, 34 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீரை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ’ஸான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா’வின் கீழ் உள்ள அனைத்து 117 கிராமங்களுக்கு 100 சதவீதமும், முக்கிய மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் எஸ்.சி. / எஸ்.டி. மக்கள் 90 சதவீதம் உள்ள வாழ்விடங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
78 சதவீதம் குழாய் இணைப்புகளைக் கொண்ட சிவகங்கை, 61 சதவீதம் வேலூர், 58 சதவீதம் வீட்டு இணைப்புகளைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நடப்பு ஆண்டில் 100 சதவீதம் குழாய் இணைப்புகள் கிடைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஜல் ஜீவன் இயக்கத்துடன் இணைந்து, நீர்ப்பாசனம் / குடிநீர் நோக்கத்திற்காக மழைநீரை சேமிப்பதற்காக ஏரி, குளங்களைத் தூர்வாரவும் வலுப்படுத்தவும் குடிமராமத்துப் பணிகளும் செயல்படுகிறது. குடிமராமத்துப் பணிகளின் கீழ், நீர் வளங்களை மீட்டெடுப்பதற்காக, 1,829 பணிகளுக்கு சுமார் ரூ. 500 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
வரிசைகட்டும் வித வித திட்டங்கள்
மத்திய அரசின் திட்டங்கள் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவை என்றபோதும், அவற்றை திறம்படப் பயன்படுத்திக் கொள்வதில் தமிழகம் முன்னோடியாக இருப்பதற்கு மேற்கண்ட திட்டங்களில் தமிழகம் பெற்றுள்ள அதிகப்படியான பயன்பாடே உதாரணம். சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், பாலங்கள் அமைப்பு, ரயில்வே விரிவாக்கத் திட்டங்களிலும் தமிழகத்தின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. விவசாயம், சமூகநலம், கல்வி, ஆரோக்கியம், எரிசக்தி, மின் துறை எனப் பல துறைகளில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டம் (பசல் பீமா யோஜனா), தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் (என்ஏடிபி), சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் விவசாயி கௌரவ நிதி திட்டம், பிரதமரின் மக்கள் நலத் திட்டமான ’ஆயுஷ்மான் பாரத்’ சுகாதாரக் காப்பீடு திட்டம், அனைத்து கிராமங்களையும் மின்மயமாக்கும் ‘சௌபாக்யா’ திட்டம், தொழில் துறையில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’…
– சேக்கிழான்