பொய்மை முழக்கங்கள்

பாஜக மூலம் ஆரியம் தமிழ்நாட்டில் நுழைகிறது என்று சொல்லியிருக்கிறார் திமுக தலைவர். இவருக்கு ஆரியம் எது திராவிடம் எது என்பது புரிந்திருக்கிறதா என்பது நமக்கு தெரியவில்லை. ஒரு காலத்தில் வடக்கு வாடுகிறது, தெற்கு தேய்கிறது என்றார்கள். இப்போது திராவிடத்தை ஆரியம் அழிக்கிறது என்கிறார்கள் எல்லாமே தவறான தகவல்கள். எங்கே இருக்கிறது இவர்களது திராவிடம்? தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும்தான் திராவிடர்கள் என்றால், திராவிடர்கள் என்ற தனி வார்த்தையே தேவையில்லையே, தமிழர்கள் என்று சொல்லிவிட்டு போகலாமே!

திராவிடம் என்பது இனத்தின் பெயரல்ல, நிலப்பரப்பின் பெயர். அதில் தமிழ்நாடு தவிர கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உண்டு. எம்ஜிஆரை மலையாளி என்றபோதும் ஜெயலலிதாவை கன்னடத்து பெண் என்ற போதும், பிறரை தெலுங்கர்கள் என்று சொன்ன போதும் எங்கே போயிற்று இவர்களின் திராவிட உணர்வு?
நமது தேசிய கீதத்திலும் திராவிட என்று குறிப்பிடப்படும் வார்த்தை நிலப்பகுதிதான், இனம் அல்ல. ஆதிசங்கரர் கேரளத்தில் பிறந்தவர். அவரை வடநாட்டு அறிஞர்கள் ‘திராவிட சிசு’ என்றார்கள். அவர் ஒரு மலையாளியாக வாழவில்லை. பாரத தேசத்தின் மகான்களில் ஒருவராக வாழ்ந்தார். ஆறு பிரிவுகளாக இருந்த ஹிந்து மதத்தை ஒன்றுபடுத்தினார். அதனால் ஷண்மத ஸ்தாபகர் என்று பெயர் பெற்றார்.

நாட்டின் நான்கு மூலைகளில் மடங்களை நிறுவினார். அவர் தம்மை திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கு ஆரியர் ஆகிறார். அது எப்படி? கேரளத்தில் பிறந்தவர் திராவிடர் தானே. ஆரியர் திராவிடர் என்ற பாகுபாட்டை திமுக அதிகம் சொல்லிவந்த போதிலும் இந்த திராவிட என்ற வார்த்தைக்கு அரசியல்வாதிகளிடையே ஒரு மயக்கம் இருக்கிறது. அதனால்தான் பல கட்சிகள் திராவிட என்ற அடைமொழியை தன் கட்சிப்பெயரில் சேர்த்துள்ளனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்னும் சில. திராவிட என்பது விஸ்கிக்கு கொடுக்கப்படும் பிளாக் லேபிள் போன்றது. அரசியலும் ஒரு போதைப்பொருள் தானே! சரி, திமுக காரர்கள் அப்படி ஒரிஜினல் பிளாக் லேபிள் திராவிடர்கள் தானா? பண்டாரங்கள், பரதேசிகள் என்று ஏசிய பாஜக வுடன் கூட்டு சேர்ந்து மந்திரி பதவிகள் பெற்றார்கள் அப்போது எங்கே போயிற்று திராவிட பாசமும், ஆரிய எதிர்ப்பும்? பணமும் பதவியும் வரும்போது திராவிடம் போய்விடுகிறது ஆரியம் வருகிறது. கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரசுடன் பிணக்கும் போது சொல்லும் சேரும் போது அதை மறந்துவிடும். ஓ, இதற்கு பெயர்தான் திராவிட உணர்வோ?

வடக்கு வாடுகிறது, தெற்கு தேய்கிறது என்று வசனம் பேசினார்களே வடக்கினால் வாழ்ந்து வருபவர்கள் தானே இவர்கள், சம்பாத்தியம் எல்லாம் தெற்கில் மந்திரிகளாக இருந்தபோது கிடைத்தது மட்டும் தானா. இவர்களுக்கு தேவை என்றால் ஹிந்தி பேசுவார்கள். பேசுபவர்களை பக்கத்தில் வைத்துக்கொள்வார்கள். மக்களுக்கு ஹிந்தி தெரிந்தால் வடக்கு வாடிவிடும் தெற்கு தேய்ந்துவிடும்.

அதானிக்கும் அம்பானிக்கும் உதவியாக இருக்கிறார் மோடி என்கிறார்களே.. பாஜக கார்பொரேட் நிறுவனங்களை ஆதரிக்கிறது என்கிறார்களே.. இவர்கள் நடத்தும் சினிமா கம்பெனியும், தொலைக்காட்சி சேனல்களும் சர்வதேச கார்பொரேட் நிறுவனங்களா அல்லது அப்பளம் தயாரிக்கும் குடிசை தொழிலா? தமிழ்நாட்டை காங்கிரஸ் ஆட்சி செய்த போது கோடைகாலத்தில் ஊட்டியில் சட்டமன்றத் தொடர் சில நாட்கள் நடந்தது. அப்போது திமுக காரர்கள் சுவரொட்டி ஒட்டினார்கள். “கும்பி எரியுது குடல் கருகுது உங்களுக்கு ஊட்டி குளுகுளு வாசம் ஒரு கேடா” ஐயோ பாவம் திமுக காரர்கள் எல்லோரும் வேகாத வெயிலில் ஓட்டை கீற்று கொட்டகைகளில் அல்லவா வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஏசி என்றால் என்னவென்றே தெரியாதே. அன்றும் இன்றும் ஒரே வாழ்க்கையைத்தானே வாழ்கிறார்கள். இவர்களுக்கு நல்ல வீடு உண்டா, நல்ல உடை உண்டா, நல்ல வாகனம் உண்டா, அடிதட்டு பாமர மக்களைப்போலத்தானே இவர்கள் வாழ்கிறார்கள்? ஏனென்றால் இவர்கள் அரசியலில் காசு சேர்க்கவே இல்லை.

சரி, ஆரியம் என்றால் அது என்ன? வடக்கே இருந்து வருவதெல்லாம் ஆரியமா. வடக்கே இருந்து ஹிந்தி மொழி இங்கே வரக்கூடாது. சமஸ்கிருதம் வரக்கூடாது. இதேபோல் வடக்கத்தியர்கள் சொன்னால் தெற்கத்தியர்களான நம்மவர்கள் வடக்கே போக முடியாதே… தேசம் ஒன்று என்கிறபோது வடக்காவது, தெற்காவது? ஆரியமாவது, திராவிடமாவது? திமுக காரர்கள் மந்திரிகளாக இருந்தபோது பச்சை தமிழர்களிடம் இருந்து மட்டுமே லஞ்சம் வாங்கினார்களா, ஆரியத் தொழிலதிபர்களிடம் இருந்து எதுவும் வாங்கவில்லையா? பணம் என்றால் இனம் வராது. ஆனால் தேர்தலில் பேசும் போது இனம் பற்றி பேசி பகையுணர்வை வளர்க்கலாம்.
வீட்டுக்குள் ஆத்திகம், வெளியே நாத்திகம். சொந்தக்காரர்கள் கோயிலுக்குப் போவார்கள், மற்றவர்கள் போகக்கூடாது. இவரது உறவினர்கள் நெற்றியில் இருந்தால் அது குங்குமம், மற்றவர் நெற்றியில் இருந்தால் அது ரத்தம். குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டிருந்த ஒரு கட்சிக்காரரைப் பார்த்து உங்கள் நெற்றியில் இருப்பது ரத்தமா என்று கேட்டார் கருணாநிதி. தங்கள் வீட்டு பெண்களை பார்த்து கேட்கவேண்டியதுதானே?

“ஊருக்கு உபதேசமடி பெண்ணே உனக்கு இல்லையடி கண்ணே” என்பதே இவர்களின் நடைமுறை. மேடையில் இவர்கள் பேசுவதெல்லாம் மக்களுக்காக. இருட்டறையில் ஒதுக்கிக்கொள்வதெல்லாம் தமக்காக. இவர்களது வெளிவேஷத்தில் மயங்குகிறார்கள் மக்கள். இது எத்தனை நாளைக்கு? ஒருமுறை அமெரிக்க தூதரை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது கருணாநிதி சொன்னார் தமிழ்நாட்டில் அரசியல் என்பதே பிராமணர்களை எதிர்த்துத்தான். திராவிட கழகம் அப்படி இருந்திருக்கலாம். திராவிட முன்னேற்ற கழகம் ஏன் அப்படி நடந்துகொள்ளவில்லை.

அப்படியானால் முன்னேற்றம் என்பது எது? தி.க., தி.மு.க இரண்டின் பிராமண எதிர்ப்பிற்கு காரணம் பிராமணர்கள் பிரிட்டிஷ் காலத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார்கள் என்பதே. பிராமணர்கள் வேற்று மொழியை எளிதில் படித்து புரிந்துகொண்டார்கள் அதனால் பிரிட்டிஷ்காரர்களிடம் நல்ல உறவு இருந்தது. கெட்டிக்காரர்களாக இருந்ததனால் பிரிட்டிஷ் அரசு அவர்களை பயன்படுத்திக்கொண்டது. அவர்களில் சிலர் பிரதேச நிலைமைகளை மக்களின் மனப்பாங்கை ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் மொழியில் எடுத்துச் சொல்வதில் வல்லவர்களாக இருந்தார்கள். அந்தப் பணிக்கு துபாஷி என்று பெயர். அதாவது இரண்டு மொழி தெரிந்தவர்கள். பிராமணர்கள் மட்டுமா துபாஷிகளாக இருந்தார்கள்? பிள்ளைகளும் முதலியார்களும் அப்படி இருந்தார்களே. புதுச்சேரியில் ஆனந்தரங்கம் பிள்ளை அப்படி இருந்தாரே. அவரது நாட்குறிப்பு இன்றும் ஒரு ஆவணமாக கருதப்படுகிறதே. இனம் தவிர மொழி என்று பேசும் திமுகவினர் ஹிந்தி அரக்கி ஒழிக என்று சொல்லி கூப்பாடு போட்டதைத் தவிர. தமிழை வளர்த்தார்களா.

இவர்கள் நடத்திய உலகத்தமிழ் மாநாடுகளெல்லாம் மொழி வளர்ச்சிக்காக இல்லை. மொழியை கருவியாக கொண்ட அரசியல் மாநாடுகள். தங்களுக்கு வேண்டியவர்களை உயர்த்தினார்கள். இவர்களுக்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் தமிழ் வளர்ந்தது. தமிழில் கலை களஞ்சியம் தொகுதிகளைக் கொண்டு வந்தவர்கள் காங்கரஸ் காரர்கள். அதுவும் அப்போதைய கல்வி மந்திரி தி.சு. அவிநாசி லிங்கம் செட்டியார் அவர்களால். வேறு ஒரு உதாரணத்தையும் எடுத்துப்பார்ப்போம். திமுக ஆட்சிக்கு முன்பு வந்த தமிழ்ப் புத்தகங்கள், திமுக ஆட்சிக்கு பின்பு வந்த தமிழ்ப் புத்தகங்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் திமுக காலத்திய புத்தகங்களில் தான் தமிழ் எழுத்துப் பிழைகளும், இலக்கண பிழைகளும் இருந்தன என்பது தெரியவரும். இவர்களுக்கு ஆங்கிலம் வேண்டும் அதனால் ஹிந்தி வேண்டாம். தமிழ் வேண்டும் அதனால் ஆங்கிலம் வேண்டாம் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தாலும் தன் வீட்டுப் பிள்ளைகளை ஆங்கில வழி கல்விகூடத்தில் சேர்ப்பார்கள்.

தாங்கள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் ஹிந்திக் கற்றுத்தருவார்கள். ஏமாந்தவர்களின் தலையில் மிளகாய் அரைப்பது இவர்களுக்கு பழக்கப் பட்ட சமாச்சாரம். இவர்களுக்கு காசு வேறு வேஷம் வேறு என்பது தெரிந்திருக்கிறது. இவர்களை பற்றி நமக்குத்தான் தெரிய வில்லை. அதனால்தான் அவர்கள் நம்மை இன்னும் ஆளத் துடிக்கிறார்கள்.

-ஆர்.நடராஜன்