ஒடிசாவில் உள்ள புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் 35,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை விற்பனை செய்வதற்கான பணியை அம்மாநில அரசுத் தொடங்கியுள்ளது. முன்னாள் ஆளுநர் பி.டி. சர்மா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆலோசனை கேட்கப்பட்டது. அக்குழு அளித்த பரிந்துரையின் பேரில் இந்த நிலங்களை விற்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்ரீ ஜெகந்நாத் கோயில் நிர்வாகத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயத்திற்கு 60426.943 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் சுமார் 400 ஏக்கர் ஒடிசாவுக்கு வெளியே அமைந்துள்ளன. இதில் பல நிலங்கள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு துவங்கியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கோயிலின் நிதி ஆதாரத்தை 650 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடியாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். எனவே பூரியை உலக பாரம்பரிய நகரமாக மாற்றும் திட்டத்தில் ஒடிசா அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு ரூ. 3,000 கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது என அம்மாநில சட்ட அமைச்சர் பிரதாப் ஜீனா ஒடிசா சட்டமன்றத்தில் தெரிவித்தார்.