மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ‘புதுப்பிக்க கூடிய எரிசக்தி, வாகன புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை குறைப்பது, காடுகளின் நிலப்பரப்பை அதிகரிப்பது உட்பட, பாரிஸ் ஒப்பந்தத்தில் பல்வேறு உறுதிமொழிகளை ஜி-20 நாடுகள் அறிவித்துள்ளன. அந்த உறுதிமொழிகளை பாரதம் மட்டுமே சரியாக கடைப்பிடித்து வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், மரங்கள் உள்ள நிலப் பரப்பு, தேசம் முழுவதும் 15 ஆயிரம் சதுர கி.மீ., அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இதன் வேகம் மேலும் அதிகரிக்கும். காடுகளின் நிலப்பரப்பை அதிகரிப்பதற்காக, மாநில அரசுகளுக்கு ரூ. 48 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு கடந்தாண்டு வழங்கியுள்ளது. வனப்பகுதிகளின் பரப்பை அதிகரிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன’ என தெரிவித்தார்.