திருப்பாவை பாசுரம் – 23

மாரி பொழிந்து மனங்களனைத்தும் குளிர்ந்திருக்கும் காலம் – இணையுடன் மகிழ்ந்திருந்த மிருகங்கள் குகைகளை விட்டு வெளியே வரும் நேரம். இதுவரை உறங்கியிருந்த சிங்கம், அடியார்கள் குரல் கேட்டதும் சட்டென விழிக்கிறதாம். எழுந்து, உடம்பில் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்சம் சோம்பலையும் முறித்து, உடல் சிலிர்த்துக் கேசத்தை அம்பாரம் போல் உலுக்கி கர்ஜனை செய்ய, அதன் பகைவர்கள் ஓடி ஒளிய கம்பீரமாகத் தனது குகை வாயிலுக்கு வருகிறது. அதைபோல கண்ணனை சிங்காசனத்தில் வந்து அமரக் கோருகிறாள் கோதை நாச்சியார். ராமச்சந்திர மூர்த்தியை சீதை ரசித்தது போல் ஆண்டாளும் கண் நிறைய கண்ணனின் நடையழகைக் காண விழைகிறாள். “கண்ணன் தரிசனம் நிமித்தம் நோன்பு மேற்கொண்டவர்கள் பாவையராகிய  நாங்கள். எங்களருகே வந்தமர்ந்து எங்கள் வார்த்தையைத் தயைசெய்து கேட்பாயாக. எங்களுக்கு அருள் செய்ய வா. உன்னை அடையவே எங்கள் அவா பூர்த்தியாகும்”.