சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார்

சட்டம் படித்து சேலத்தில் பிரபல வழக்கறிஞராக இருந்தவர் ராஜாஜி. அப்பொழுதே ஒரு வழக்குக்கு ரூ. 1000 வாங்கும் அளவுக்கு திறமை உடையவராக இருந்தார். 1917ல் சேலம் நகராட்சி தலைவர் ஆனார். சம்பளமே வாங்காமல் தினமும் ஆறு மணி நேரம் உழைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார் ராஜாஜி.

மகாகவி பாரதியாரும் ராஜாஜியும் தேச விடுதலை போராட்டம் குறித்து பல சந்திப்புகளில் விவாதித்தனர். சென்னையில், ராஜாஜியின் வீட்டில்தான் பாரதியார் முதன்முறையாக காந்தியைச் சந்தித்தார். ஒத்துழையாமை இயக்கத்திற்காக வக்கீல் தொழிலை துறந்தார். உப்பு சத்தியாகிரகத்தை தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தினார் ராஜாஜி. தேர்தலில் காங்கிரஸ் வென்றபின் முதல்வர் ஆன ராஜாஜி, மது விலக்கை  முதலில் அமல்படுத்தினார். ஆலய பிரவேசத்தை பட்டியலின மக்களுக்கு சாத்தியப்படுத்தினார். விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க சட்டமியற்றினார். கவர்னர் ஜெனரல், முதல்வர், கவர்னர், உள்துறை அமைச்சர் என்று பதவிகளை வகித்த அவர், வாழ்ந்தது ஐம்பது ரூபாய் வாடகை வீட்டில் தான். கவர்னர் ஜெனரல் மாளிகையை விட்டு வெளியேறிய பொழுது தன்னுடைய கைத்தடியோடு மட்டும் வெளியேறியவர். குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் மரணமடைந்து இருந்த சூழலிலும், “குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ” என்று பாடல் எழுதினார்.

நேருவின் கம்யூனிஸ்ட்கள் மீதான பாசத்தை கண்டித்தார். சோவியத் நட்பை விமர்சித்தார். சீனா ஆபத்தானது என்று முன்கூட்டியே எச்சரித்தார். கருணாநிதி மதுவிலக்கை நீக்க முடிவு செய்த பொழுது, தன் தள்ளாத வயதிலும், கொட்டும் மழையில் கருணாநிதியை சந்தித்து அவரின் கையைபிடித்து அமல்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த தினம் இன்று