இரண்டு ரத்தினங்கள்

ராஜஸ்தானில், ஒரு கிராமத்தில் வாழ்பவர் ஏக்நாத். அவர் ஒரு வியாபாரி, பல இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்பவர். தான் பயணம் செய்ய சந்தைக்கு சென்று ஒரு ஒட்டகம் வாங்கினார்.

வீட்டுக்கு சென்றதும் தன் வேலைக்காரனை அழைத்து ஒட்டகத்தைக் கொட்டிலில் அடைக்கச் சொன்னான்.

அந்த ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை வேலையாள் அவிழ்த்த போது, அதிலிருந்து ஒரு சிறிய பை விழுந்தது. அதை எடுத்து பார்த்த அவனுக்கு ஆச்சரியம்.

பையில் விலை உயர்ந்த நவரத்தினங்கள் இருந்தன. அதை முதலாளியிடம் காட்டினான்.

அதை வாங்கி பார்த்தார் ஏக்நாத். அத்தனையும் சுத்தமான ரத்தினங்கள். இதை உடனே ஒட்டகம் விற்றவரிடம் ஒப்படைக்க புறப்பட்டார். அந்த பணியாள், ‘ஐயா இந்த நவரத்தினப்பை ஒட்டகத்தில் இருந்தது யாருக்கும் தெரியாது. இதை இறைவன் அளித்த பரிசாக நீங்களே வைத்துக்கொள்ளலாமே’ என்றான்.

ஆனால் ஏக்நாத்தோ, இல்லை நான் இதை ஒப்படைத்தே தீருவேன்  என  கிளம்பினார். தேடி சென்று அதை ஒட்டகத்தை விற்றவரிடம் ஒப்படைத்தார்.

அவரும் நன்றியோடு வாங்கிக்கொண்டார். பின், ‘ஐயா உங்கள் நேர்மைக்கு, பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு விருப்பமான சில ரத்தினங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என பையை நீட்டினார். ‘வேண்டாம், நான் ஏற்கனவே இரண்டு விலை உயர்ந்த ரத்தினங்களை எடுத்துக் கொண்டேன்’ என்றார் ஏக்நாத்.

ஒட்டகத்தை விற்றவர், ‘நான் எண்ணிப்பார்த்தேனே, ரத்தினம் குறையவில்லையே’ என குழம்பினார். அதற்கு, நான் எடுத்துக் கொண்ட இரண்டு ரத்தினங்கள், எனது நேர்மையும், சுயமரியாதையும் தான் என்றார் அந்த நேர்மையான வியாபாரி ஏக்நாத்.