அறிவோம் ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் என்பது ஆயுள் காக்கும் மறை (வேதம்). ஆயுர்வேதம் ஐந்தாவது வேதமாக கருதப்படுகிறது. பிரம்மாவால் நினைவு கூறப்பட்டு ரிஷிகளுக்கு எடுத்து  உரைக்கப்பட்டு அவர்களால் கடை பிடிக்கப்பட்டு மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மறை (வேதம்) ஆகும். இதில் கூறப் பட்டுள்ள வாழ்வின் முறைகள், வழிகள் கடை பிடிக்கப்பட்டால் நோய் நொடி இல்லா நீண்ட ஆயுள் உடன் வாழலாம்.
ஆயுர்வேதத்தில் ரெண்டு வித பயன்கள் கூறப்பட்டு உள்ளது. முதலாதாக ‘ஸ்வஸ்த ரக்ஷனம் (வரு முன்காப்போம்)’. ஆரோக்கியமாக உள்ள ஒருவர் எந்த விதத்திலும் தன்னுடைய ஆரோக்கியத்தை இழக்காமல் பாதுகாக்கும் வழி முறைகள். இரண்டாவதாக ‘ஆதுரஸ்ய விகார பிரசமனம்’. நோய் வந்த பின்பு குணப்படுத்தும் சிகிச்சை முறை. இது ரெண்டும் முக்கிய பயனாக கூறப்பட்டுள்ளது.வருமுன் காப்போம் பகுதியில் தின சரியை- ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கு தினசரி வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

1. பிரம்ம முகூர்த்தத்தில் (விடிகாலையில்) எழுந்திருப்பது வழக்கமாக கொள்ள வேண்டும்.
2. பல் தேய்க்க வேண்டும். துவர்ப்பு, கசப்பு உள்ள வேர்கள், மூலிகை குச்சிகள் பயன்படுத்தி பல் தேய்ப்பது மிகவும் நல்லது. ஆல், வேல், மருதை, புங்கை, கருங்காலி, நாயுருவி போன்ற மூலிகை செடிகளை பல் தேய்ப்பதற்கான பிரஷ் ஆக பயன் படுத்தலாம்.
3.பற்ப்பொடி: திரிபலா சூரணம், திரிகடு சூரணம், ஏலக்காய் கிராம்பு லவங்கப்பட்டை ஜாதிக்காய் உமிக்கரி பார்லிக்கரி இவைகளை சேர்த்து தயாரித்த பற்ப்பொடியாக உபயோகித்தால் பற்களில் சீழ் துர்நாற்றம் முதலியவை அகலும்3. அஞ்சனம் ( கண் மை இடுதல்) : விளக்கெண்ணெயை பஞ்சு திரியில் தோய்த்து எரிய விட்டு அதில் வரும் கரியை கண்ணில் இடுவதனால் கண் நோய்கள் வராது. கண் குளர்ச்சி ஆக இருக்கும்.
4. நஸ்ய கர்மா (மூக்கிற்கு மருந்து விடுதல்) : அணு தைலம் – மருத்துவ மூலிகைகள், ஆட்டுப்பால், மழைத் தண்ணீர் இவைகளால் தயாரிக்கப்பட்ட ஒரு சொட்டு மருந்து. ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டு துளிகள் விட்டுக் கொள்ள வேண்டும். இதனால் எண்ணெய் ஆனது கண் காது மூக்கு தொண்டை ஆகியவற்றில் பரவி நோய் தடுக்கும் சக்தியை கொடுக்கிறது. கழுத்து மற்றும் தோள்பட்டைகளுக்கு பலமும் குரல் வளமும் ஏற்படும்.
5. கொப்பளித்தல் : நல்லெண்ணெய் அல்லது உப்பு கலந்த வெந்நீரை வாயில் சிறிது நேரம் வைத்து கொப்பளிக்க, வாயில் உள்ள கிருமிகள் அகன்று சுத்தமாக இருக்கும்.
6. உடற்பயிற்சி : இதில் சுறுசுறுப்பான நடை மற்றும் யோகா, தியானம் அவரவர் களுக்கு ஏற்ற வகையில் செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது தன்னுடைய சக்தியில் அரைப்பகுதி (அ) முக்கால்பகுதிதான் செய்ய வேண்டும். குளிர் காலத்தில் சற்று கூடுதலாகவும், வெய்யில் காலத்தில் மிதமாகவும் செய்ய வேண்டும். உடம்பு நன்றாக வியர்த்ததும் மெதுவாக பிடித்து விட வேண்டும்.
7. ஸ்நானம் (எண்ணெய்க்குளியல்) : பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கண்டிப்பாக நல்லெண்ணெய் குளியல் கீழ் சொல்லும் முறையில் செய்ய வேண்டும்.
நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து, முதலில் உச்சந்தலையில் தேய்த்து, பிறகு தலையின் மற்ற பாகங்களில் நன்றாக தேய்க்கவும். பிறகு பாதம், கைகள், கால்கள், தொப்புள் என்ற வரிசையில் தேய்த்து பதினைந்து நிமிடம் ஊற விட்டு பின்னர் வெந்நீரில் குளிக்க வேண்டும். பயன்கள் : தலையில் தேய்ப்பதால் பொடுகு அரிப்பு போன்ற தலை நோய்கள் வராமல் காக்கப்படுகிறது. பிராண சக்தி பலப்படுகிறது. பாதத்தில் தேய்ப்பதால் கண்கள் தெளிவாக இருக்கும், நல்ல தூக்கம் வரும். உடல் முழுவதும் தேய்ப்பதால் உடல் சோர்வு, நரம்பு தளர்ச்சி, அலுப்பு ஆகியவற்றை போக்கும். சருமம் பளபளப்பாக, மிருதுவாக, சுருக்கமில்லாமல் இருக்கும். மூப்பு சீக்கிரம் வராது. திடமாக இருக்கும். தினமும் சாதாரணமாக குளிப்பதால் உடல், மனம் சுத்தமாகும். களைப்பு நீங்கி நல்ல பசி எடுக்கும். ஆயுள், விந்து விருத்தியாகும்.
8. உணவு ( உண்ணும் முறை) : ஒருவர் உண்ணும் உணவு எத்தகைய தன்மை உடையதோ  அது போலத்தான் அவர் குணமும் அமையும். பால், நெய், காய்கனி, கீரை, பருப்புவகைகளை சரியான அளவில் சாப்பிட்டால் (தேவைக்கு ஏற்ப) அவரின் மனநிலை பதற்றமில்லாமல் அமைதியாக இருக்கும். காரம் புளி உப்பு எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக உண்பவனின் மனநிலை ஆசாபாசங்கள் நிறைந்து, உணர்ச்சி வசப்பட்ட ஒருவராக இருப்பார்.
அசுத்தமான, பழைய, கெட்டுப்போன,புளித்துப் போன உணவுகளை உண்பவன் மன நிலை மந்தமாக இருக்கும்.
சாப்பிடும் உணவு அறுசுவையும் (இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு) கொண்டு இருக்க வேண்டும். இவை ஆறு சுவைகளும் உடல் தோஷங்களை சமமாக வைத்திருந்து ஜீரண சக்தியை அதிகரித்து உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. உண்ணும் போது, வயிற்றில் மூன்றில் ஒரு பங்கு திட உணவாகவும், ஒரு பங்கு திரவ உணவாகவும், ஒரு பங்கு காலியாக இருக்குமாறு உண்ண வேண்டும். நன்கு பசித்து, சூடாக, எண்ணெய் (அ) நெய் சேர்த்து உண்ண வேண்டும். உணவை கடவுளாக மதித்து உண்ண வேண்டும்.
9. தாம்பூலம் : உணவுக்கு பின் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு,  வால்மிளகு, பச்சை கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் சேர்த்து உண்ண வேண்டும். இது செரிக்க உதவும், உணவுப் பாதையை சுத்தம் செய்தல் மற்றும் சுறு சுறுப்பாக இயங்க வைக்கும்.

10. தூக்கம் : உணவு, உறக்கம் இரண்டும் மனித வாழ்க்கை யின் முக்கிய அம்சங்கள். அகாலத்தில் தூங்குவது, நிறைய நேரம் அல்லது குறைய நேரம் தூங்குவது, ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது இரவில் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் உறக்கம் நிச்சயத்தேவை. பகல் உறக்கம் கூடாது. வயதான வர்கள், அதிக பயணம் செய்பவர்கள், நோய்வாய் பட்டவர்கள், குழந்தைகள் பகலில் உறங்கலாம். மற்றவர்கள் பகலில் உறங்கினால் கபம் அதிகமாகி உடல் பெருக்கும். தொண்டைவலி காய்ச்சல் பசியின்மை ஏற்படும். வெயில் காலங்களில் எல்லோரும் சிறிது நேரம் பகல் தூக்கம் கொள்ளலாம். இரவு கண் விழித்தால், வாயு அதிகரித்து, உடல் உலர்தல், தலை வலி, சோம்பல், கண் எரிச்சல், களைப்பு உண்டாகி ஆரோக்கியத்தை பாதிக்கும். நல்ல உறக்கம் வர, சுத்தமான பசு நெய் இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் பலன் தரும். எண்ணெய் தேய்த்து குளித்து வந்தாலும் பசும் பால் இரவில் குடிப்பதாலும் நல்ல உறக்கம் வரும்.

மேலே சொன்ன வழி முறைகளை கடை பிடிப்பதால் நோயின்றி, ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ முடியும் என ஆயுர்வேதம் கூறுகிறது.