காங்., ஆட்சி தப்பிக்குமா? ம.பி., சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு

மத்திய பிரதேச கவர்னர் உத்தரவின்படி, முதல்வர் கமல்நாத், சட்டசபையில் இன்று(மார்ச் 16) நம்பிக்கை ஓட்டு கோருகிறார். ‘நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைப்போம்’ என, காங்கிரஸ் தலைவர்களும், ‘கமல்நாத் ஆட்சி கவிழ்வது உறுதி’ என, பா.ஜ., தலைவர்களும் கூறி வருவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ம.பி.,யில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2018 டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்த லில், காங்கிரஸ், 114 தொகுதிகளிலும், பா.ஜ., 107 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன், கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

வளைத்தனர்:

காங்கிரசின் மற்றொரு முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, தனக்கு முதல்வர் பதவி கிடைக்காததால், கட்சி தலைமை மீது, கடும் அதிருப்தியில் இருந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய, பா.ஜ., தலைவர்கள், சிந்தியாவை வளைத்தனர். ஆறு அமைச்சர்கள் உட்பட, காங்கிரசைச் சேர்ந்த, சிந்தியா ஆதரவாளர்களான, 22 எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக, சமீபத்தில் அறிவித்தனர்.

இதனால், கமல்நாத் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. டில்லி சென்ற சிந்தியா, பா.ஜ., தலைவர்களை சந்தித்து, அந்த கட்சியில் தன்னை இணைத்தார். இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள், ஹரியானா மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று கூடுகிறது:

இந்த பரபரப்பான சூழலில், பட்ஜெட் தொடருக்காக, ம.பி., சட்டசபை இன்று கூடுகிறது. இதில், கவர்னர் உரை முடிந்த பின், சட்டசபையில் பலத்தை நிரூபிக்கும்படி, முதல்வர் கமல்நாத்துக்கு, கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ஜெய்ப்பூர் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த, காங்., – எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், நேற்று போபால் திரும்பினர். இங்குள்ள சொகுசு ஓட்டலில், பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான, பி.சி.சர்மா கூறுகையில், ”பெரும்பான்மைக்கு தேவையான, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, எங்களிடம் உள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் கட்டாயம் வெற்றி பெறுவோம்,” என்றார்.

ஹரியானாவில் தங்க வைக்கப்பட்டுள்ள, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் இன்று காலை விமானத்தில் போபாலுக்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், இன்று சபையில் ஆஜராகும்படி, கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பா.ஜ., கொறடா, நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது: காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்து விட்டது. ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிப்பதற்கு, கமல்நாத்துக்கு அருகதை இல்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பில், காங்கிரஸ் அரசு கண்டிப்பாக கவிழும். இவ்வாறு, அவர் கூறினார்.

கடிதம் ஏற்பு:

சிந்தியா ஆதரவு அமைச்சர்கள் ஆறு பேரின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனால், சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 222 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கையும், 112 ஆக குறைந்துள்ளது. ஆனால், காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், 16 பேரின் ராஜினாமா குறித்து, சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. தற்போது, காங்., – எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 92 ஆக குறைந்துள்ளது.

கமல்நாத் கட்சிக்கு, சுயேச்சை மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்த, ஏழு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது. இன்று நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, இவர்களில் சிலர், பா.ஜ., பக்கம் சாய்வதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சபாநாயகர் இன்று எடுக்கும் முடிவை பொறுத்து, கமல்நாத் அரசின் ஆயுள் தீர்மானிக்கப்படும் என்றாலும், ஆட்சி கவிழ்வதற்கே அதிக வாய்ப்புள்ளது என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை கூட்டம்:

போபாலில், முதல்வர் கமல்நாத் தலைமையில், நேற்று மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்தும், அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஆறு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக, புதிதாக யாருக்கு அமைச்சர் பதவி தரலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.