தேசத்துக்கு நாங்கள்தான் விடுதலை வாங்கிக் கொடுத்தோம் என்பதாக வெகு காலமாக காங்கிரஸ் கட்சி மார்தட்டி வந்ததெல்லாம் எவ்வளவு பெரிய பொய் என்பது மெல்ல மெல்ல அம்பலமாகி வருகிறது. ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என்று பல நாட்டு ஆதிக்கம் பாரதத்தின் பல பகுதிகளை கேன்சர் போல பீடித்திருந்தது. இந்திய சுதந்திரக் கொடியை 1947க்கு முன் 1945 லேயே சுதந்திர அந்தமானில் வானில் பட்டொளி வீசிப் பறக்கச் செய்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்பது காங்கிரசின் இருட்டடிப்புகளையும் மீறி பலருக்கு இன்று தெரிந்திருக்கிறது. பலருக்கும் இன்று தெரிய வேண்டிய இன்னொரு விஷயம் சத்ரபதி சிவாஜி மகாராஜா போர்ச்சுக்கீசியரின் பிடியிலிருந்து ஒரு துறைமுக நகரத்தை தனது கப்பற்படை, அபார வியூகம் இவற்றைக் கொண்டு விடுவித்திருக்கிறார் என்பதுதான்.
1655 பிப்ரவரி 13 அன்று சிவாஜி மஹாராஜா கர்நாடக கடற்கரையோரம் உள்ள பஸ்ரூர் (பழைய பெயர் வாசுபுரா) என்ற இடத்திலிருந்து போர்ச்சுகீசியர்களை வெளியேற்றினார். (அந்த ஊர் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபுரா தாலுகாவில் உள்ளது). கர்நாடக மக்கள் மறக்காமல் இதை மனதில் பதிவு செய்திருக்கிறார்கள். அதன் விளைவாக பிப்ரவரி 13 அன்று அந்த நகரத்தின் விடுதலையை மக்கள் அங்கே கொண்டாடி வருகிறார்கள். அரசாங்க ஆவணப்படி 1947 ஆகஸ்ட் 15 தான் தேசத்தின் சுதந்திர தினம். ஆனால் அங்கங்கே மக்களின் நினைவில் பதிவாகியுள்ள சுதந்திர தினங்கள் இன்னும் எத்தனை எத்தனை என்று தேடிப் பார்த்தால் கிடைக்கும் போலிருக்கிறது. தொன்மையான அந்த நகரில் சென்னை போலவே கடலில் நதி கலக்கும் இடத்திற்கு அருகில் துறைமுகம் அமைந்துள்ளது. போர்ச்சுக்கீசியரின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பி சத்ரபதி சிவாஜியின் கப்பற்படை இந்த ஊரை அடைந்து இரண்டு நாட்கள் அங்கே சிவாஜி வந்து தங்கி போர்ச்சுகீசிய ஆதிக்கத்தை அப்புறப்படுத்தினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!