2030க்குள் 6ஜி அலைக்கற்றை

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் துவக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொலிகாட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘5ஜி அலைக்கற்றை சோதனையை துவக்கி வைத்தார். அப்போது பேசுகையில், ‘கடந்த 8 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தியுள்ளோம். 2ஜி சகாப்தம், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது. 3ஜியில் இருந்து 4ஜிக்கு பாரதம் வேகமாக முன்னேறியுள்ளது. தற்போதைய மத்திய அரசு, 4ஜி நெட்வொர்க் மற்றும் 5ஜி நெட்வொர்க்கில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்துள்ளது. அலைபேசி உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் 2ல் இருந்து 200 ஆக அதிகரித்துள்ளது. நமது நாடு தான் உலகின் மிகப் பெரிய அலைபேசி உற்பத்தி மையமாகத் திகழ்கிறது. தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது. பாரதத்தில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சுமார் 450 பில்லியன் டாலர் அளவிற்கு நாட்டின் பொருளாதாரத்திற்கு ‘5ஜி’ தொழில்நுட்பம் பங்காற்றும். இது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமையான விஷயம். இது இணைய வேகத்தை மட்டுமில்லாமல் நாட்டின் வளர்ச்சியின் வேகத்தையும் அதிகரிக்கும். வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கப்பட வேண்டும். வேளாண்மை, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, தளவாடங்கள் ஆகியவையும் இதனால் வளர்ச்சி பெறும். 21ஆம் நூற்றாண்டின் வளர்ச்சியை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும். வரும் 2030ம் ஆண்டுக்குள் 6ஜி நெட்வொர்க்கை நாட்டில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சிறப்பு குழு தனது பணியைத் தொடங்கிவிட்டது. தொலைத்தொடர்பில் ஆரோக்கியமான போட்டியை மத்திய அரசு ஊக்குவித்ததால் உலகிலேயே நமது தேசத்தில்தான் மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா கிடைக்கிறது’ என்று பேசினார்.