கேரளாவில் கடந்த 2008 முதல் 650 நெல் ரகங்களை பாதுகாத்து வரும் சத்யநாராயணா பெலேரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டம், பேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்யநாராயணா பெலேரி (50). வருங்கால சந்தியினருக்காக நெல் ரகங்களை பாதுகாத்து வரும் இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சத்யநாராயணன் கூறும்போது, “அறுவடை முடிந்துவயல்களில் விடப்பட்ட நெற்கதிர்களை முதலில் சேகரிக்கத் தொடங்கினேன். பிறகு பலவித நெல் ரகங்களை சேகரிக்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. இப்போது, என்னிடம் 650 நெல் ரகங்கள் உள்ளன.
நான் நெல் விவசாயி அல்ல. நெல் பாதுகாவலர் மட்டுமே. அனைத்து ரக நெல்களும் சிறிய அளவு நிலத்தில் தான் ஆண்டு முழுவதும் ஒன்றன் பின் ஒன்றாக விளைவிக்கப்படுகின்றன.
நான் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதை அறிந்து, நாடு முழுவதிலும் உள்ள வேளாண் விஞ்ஞானிகளும் விவசாயிகளும் தங்களிடம் உள்ள நெல் ரகங்களை என்னிடம் ஒப்படைக்க முன் வருகின்றனர் எனக்கு ஒரு பிடி விதை போதும். ஏனென்றால் நான் பாதுகாக்கும் நோக்கத்துக்காக மட்டுமே சாகுபடி செய்கிறேன். பிறகு ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு விதைகளை இலவசமாக கொடுக்கிறேன்” என்றார்.
பெற்றோர் மற்றும் ஒரு தம்பியுடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கும் சத்யநாராயணா தங்களின் வாழ்வாதாரத்திற்காக நான்கு ஏக்கர் நிலத்தில் ரப்பர் மற்றும் பாக்கு சாகுபடி செய்து வருகிறார். 50 வயதாகும் இவர், எழுத்தறிவு இயக்கம் மூலம் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார்.
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் கூறும்போது, “இந்த விருதை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த அங்கீகாரம் என்னை மேலும் பொறுப்புடையவனாக ஆக்கியுள்ளது. எனது பணியை தொடர்ந்து செய்வேன். மேலும் பல விதைகளை சேகரிப்பேன்” என்றார்.