60,000 டன் ரேஷன் பருப்பு: அதிக விலைக்கு வாங்க முயற்சி

தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், ரேஷனில் வழங்க, 60,000 டன் கனடா மஞ்சள் பருப்பு வாங்க உள்ளது. வெளிச்சந்தையில் இம்மாதம் முதல் துவரம் பருப்பு விலை குறைய உள்ளதால், அதிகாரிகள், வேண்டிய நிறுவனத்திடம் இருந்து கிலோ கனடா பருப்பை, 134 ரூபாய்க்கு வாங்க முயற்சிக்கின்றனர். இதனால், அரசுக்கு, 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்க, மூன்று மாத தேவைக்காக, 60,000 டன் துவரம் பருப்பு அல்லது ‘கனடா லென்டில்’ மஞ்சள் பருப்பு; 6 கோடி 1 லிட்டர் பாக்கெட் பாமாயில் வாங்க, இம்மாதம், 8ம் தேதி டெண்டர் கோரப்பட்டது. அவற்றின் மதிப்பு, 1,200 கோடி ரூபாய். ‘ஏற்கனவே டெண்டரில் பங்கேற்று பணி ஆணை பெற்ற நிறுவனம், முழு வினியோகம் செய்திருக்க வேண்டும்; இல்லையெனில், டெண்டரில் பங்கேற்க முடியாது’ என்பது உட்பட, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்டில் 22,000 டன் பருப்பு வாங்க, சுவாமி பெயரை கொண்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு, ‘ஆர்டர்’ வழங்கப்பட்டது. அந்நிறுவனம் இன்னும், 15,000 டன் பருப்பு சப்ளை செய்ய வேண்டியுள்ளது. எனவே, அந்த நிறுவனம், இந்த டெண்டரில் வேறொரு நிறுவனத்தின் பெயரில் பங்கேற்றுள்ளது. அந்நிறுவனம், 1 கிலோ துவரம் பருப்புக்கு, 134.70 ரூபாயும்; கனடா பருப்புக்கு, 133.75 ரூபாயும் விலை கோரியுள்ளது. வெளிச்சந்தையுடன் ஒப்பிடும்போது விலை மிக அதிகம்.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெண்டர் விதிப்படி, ஏற்கனவே ஆணை பெற்று முழுதுமாக பருப்பு வினியோகம் செய்யாத நிறுவனம் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றால், அதை நிராகரிக்க வேண்டும். ஆகஸ்டில் ஒப்பந்த ஆணை பெற்று, இதுவரை சப்ளை செய்யாத நிறுவனம், இந்த முறை வேறொரு நிறுவனத்தின் பெயரில் பங்கேற்றுள்ளது. அந்நிறுவனம் தங்களுக்கு வேண்டியது என்பதால், ஆதாயத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அதிகாரிகள் நிராகரிக்கவில்லை.

 

தற்போது, நாடு முழுதும் துவரை அறுவடை துவங்கியுள்ளது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து, சந்தைக்கு புதிய துவரம் பருப்பு வரும் என்பதால், வரும் நாட்களில் அதன் விலை குறையும். இந்த சூழலில், மூன்று மாத தேவைக்கு பருப்பு வாங்க டெண்டர் கோர அவசியமில்லை. துவரம் பருப்புக்கு இணையான தரத்தில் கனடா பருப்பு இருக்காது. எனவே, துவரம் பருப்புடன் ஒப்பிடும்போது, கனடா பருப்பு விலை கிலோவுக்கு, 20 ரூபாய் வரை குறைவாக இருக்கும். ஆனால், 1 ரூபாய் மட்டுமே விலை குறைத்து வாங்கப்பட உள்ளது.

தற்போது, சந்தையில் 1 கிலோ கனடா பருப்பு விலை, 120 ரூபாயாக உள்ளது. அந்த பருப்பை தற்போது, 133 ரூபாய்க்கு வாங்க முயற்சி நடக்கிறது. கிலோவுக்கு, 10 ரூபாய் என்று வைத்தால் கூட, 60 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.