சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில், நிலைப்படுத்தப்பட்ட பால் உற்பத்தியின்போது, பால் பவுடர் மற்றும் வெண்ணெய் சரியாக சமன்படுத்தப்படாததால், சனிக்கிழமை மாலை உற்பத்தி செய்யப்பட்டு, குளிரூட்டும் அறையில் வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை விநியோகத்துக்கு அனுப்பப்பட்ட சுமார் 60 ஆயிரம் லிட்டர் ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் கெட்டுப்போனதாக பால் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பால் முகவர்களிடமிருந்து பச்சை நிற பால் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள், அது கெட்டுப்போனதாக கூறி, வேறு பால் பாக்கெட்டுகளைக் கொடுக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பட்டாபிராம், ஆவடி, பாடி, அண்ணா நகர், நெற்குன்றம், போரூர் உள்ளிட்ட சென்னையில் பல பகுதிகளில் உள்ள பால் முகவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதால் சுமார் ரூ.26 லட்சம் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து, மகாராஷ்டிரா பால் பவுடர் மற்றும் வெண்ணெய் கலந்துபால் தயாரிக்கப்பட்டபோது, கவனக்குறைவாக இருந்து ஆவினுக்கு கடும் நிதியிழப்பை ஏற்படுத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால் முகவர்கள் நலச் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே, தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் பால் நிறுத்தப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், ஆவின் நிறுவனத்துக்கு பால்வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் ஆவின் பால் விநியோகத்தில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடின்றி தொடர்ந்து விநியோகம் செய்வதாகவும் ஆவின் நிறுவனம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. சமீபத்தில் கூட, கோவை ஒன்றியத்தில், அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் சுமார் 35 ஆயிரம் லிட்டர்பால் கெட்டுப்போனதாக புகார்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.