காங்கிரஸ் ஆட்சியில் 6 லட்சம்; பாஜக ஆட்சியில் 9 லட்சம் பேருக்கு வேலை – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் 9 ஆண்டு காலத்தில் 6 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்பட்டது. தற்போதைய பாஜக ஆட்சியில் 9 ஆண்டுகளில் 9 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழா நாடு முழுவதும் 46 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லியில் நடைபெற்ற விழாவுக்கு மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் ஒரு காலத்தில் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்ந்துள்ளது.

சந்திரயான்- 3 திட்டம் வெற்றி அடைந்திருப்பதன் மூலம் இந்திய இளைஞர்களின் கவனம் விண்வெளி துறை நோக்கி திரும்பியிருக்கிறது. விண்வெளி திட்டங்களில் தனியாரும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் இந்திய விண்வெளி துறை அபார வளர்ச்சி அடையும். முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டு காலத்தில் 6 லட்சம் பேருக்கு மத்திய அரசுபணி வழங்கப்பட்டது. தற்போதைய பாஜக ஆட்சிக் காலத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 9 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு முறையாக வழங்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய செயலக சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் 160 சதவீதம் அளவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணி மட்டுமின்றி பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரது வலுவான தலைமையால் இந்தியாஅதிவேகமாக முன்னேறி வருகிறது. இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார்.