கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிறுபான்மையினரை தாஜா செய்ய இந்த அரசு எந்த அளவுக்கும் செல்ல தயங்காது என்பதற்கு ஏற்கெனவே பல முன்னுதாரணங்கள் உள்ளன. ஓர் அரசு எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக கர்நாடக அரசு உள்ளது.
கர்நாடக சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்திடமிருந்து கல்வி, விவசாயம், சுயவேலைவாய்ப்பு, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக லட்சக்கணக்கான சிறுபான்மையினர் கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கடன் தொகையையும் செலுத்தவில்லை. வட்டியையும் செலுத்தவில்லை. 1.94 லட்சம் பேர் வட்டியாக மட்டும் சுமார் ரூ.800 கோடி கட்ட வேண்டியுள்ளது. வழங்கப்பட்ட கடன் தொகையில் சுமார் 12 சதவீதம் மட்டுமே திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. 88 சதவீதம் அசல் தொகையும் வரவில்லை. வட்டியும் வரவில்லை. இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சில பிரிவுகளின் கீழ் வாங்கிய கடனில், ஒரு ரூபாய் கூட திருப்பிச் செலுத்தப்படவில்லை. உதாரணமாக நிலம் வாங்குவதற்காக ரூ.8.13 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்காக ரூ.10.23 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகைப்பாட்டின் கீழ் வழங்கப்பட்ட கடன்தொகை எதுவும் திருப்பிச் செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் மீதான வட்டி ரூ.800 கோடியை ரத்து செய்ய வேண்டும் என்று சிறுபான்மையினர் பலர் கோரிக்கை விடுத்தார்கள். இது சிறுபான்மையினர் நலத்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரே ஒரு முறை மட்டும் கடன் மீதான வட்டியை ரத்து செய்து விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் தொகையையாவது வசூலிக்க முடியும் என்று கர்நாடக சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டார். மாநில அமைச்சரவைக்கு இதுகுறித்து அவர் பரிந்துரைத்துள்ளார்.
சிறுபான்மையினர் கடனுக்கான வட்டியை ரத்து செய்தால், அது மோசமான முன்னுதாரணமாக இருக்கும். கடன் வாங்கிய பல்வேறு சமூகத்தினரும் இவ்வாறு கோரிக்கை எழுப்பத் தொடங்கி விடுவார்கள். அனைவரின் கடன் மீதான வட்டியையும் ரத்து செய்தால், அரசே திவாலாகி விடும். எனவே சிறுபான்மையினர் வாங்கிய கடன் மீதான வட்டியை ரத்து செய்யக்கூடாது என்று பாஜக தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
கர்நாடகத்தில் சிறுபான்மையினர் வாங்கிய கடனுக்கான வட்டி ரத்து செய்யப்பட்டால், அது அந்த மாநிலத்துடன் மட்டும் நின்று விடாது. மற்ற மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கைகள் எழக்கூடும். இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் எந்த நிறுவனத்தாலும் கடன் கொடுத்து அதை வட்டியுடன் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இது பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொதுநல ஆர்வலர்கள் அழுத்தம் திருத்தமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி