கடந்த பதினொரு ஆண்டுகளில், பாரதம் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் என்ற நிலையிலிருந்து, உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்திற்கான வளர்ந்து வரும் மையமாக மகத்தான உருமாற்றம் பெற்றுள்ளது. ‘தற்சார்பு பாரதம்’ என்ற கொள்கையின் கீழ், உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சிக்கு மூலோபாய முதலீடுகளும், தொழில்துறை கூட்டாண்மைகளும் அடித்தளமிட்டுள்ளன. இதன் விளைவாக, நாட்டின் பாதுகாப்புச் சூழலமைப்பு உயர்ந்து, வலிமையும் தற்சார்பும் கைகோர்த்து வருகின்றன.
சாதனைகளும் நிதி வளர்ச்சியும்
பாரதத்தின் பாதுகாப்புத்துறை வரவு செலவுத் திட்டம் 2013-−14-ல் ₹2.53 லட்சம் கோடியிலிருந்து 2025-−26-ல் ₹6.81 லட்சம் கோடியாக நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதன் தாக்கம் உற்பத்தியில் தெளிவாகத் தெரிகிறது. 2024-−25-ல் பாரதம் இதுவரை இல்லாத அளவாக ₹1.50 இலட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு உற்பத்தியை எட்டியுள்ளது. இது 2014−-15-ல் பதிவான ₹46,429 கோடியை விட மூன்று மடங்கு வளர்ச்சி அதிகமாகும். விமானங்கள், ஏவுகணைகள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் பீரங்கிகள் என உள்நாட்டுப் பொருட்களின் வரம்பு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன், உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கும் வலுவான தொழில்துறை தளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
ஏற்றுமதி மற்றும் ஒப்பந்தங்கள்
பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதியில் பாரதத்தின் வளர்ச்சி மகத்தானது. 2013−-14ல் இருந்த ₹686 கோடியிலிருந்து, 2024-−25-ல் பாதுகாப்பு ஏற்றுமதி ₹23,622 கோடியாக அதிவேகமாக உயர்ந்துள்ளது. இது 34 மடங்கு வளர்ச்சியாகும். மேலும், 2024-−25-ல் பாதுகாப்பு அமைச்சகம் ₹2,09,050 கோடி மதிப்புள்ள 193 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதில் 177 ஒப்பந்தங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு (₹1,68,922 கோடி) வழங்கப்பட்டுள்ளன. உள்நாட்டு கொள்முதலில் இந்தத் தெளிவான மாற்றம் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் ஊக்கமளிக்கிறது.
உலகளாவிய சந்தையில்
பாரதத்தின் பங்களிப்பு
பாரதம், பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஆர்மீனியாவுக்கு ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை, பினாகா ராக்கெட் ஏவுதளம் மற்றும் ரேடார்கள், மொரீஷியஸுக்கு இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு விமான உதிரி பாகங்கள் உள்ளிட்ட முக்கியப் பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுதவிர, பாரத தயாரிப்பான 155 மி.மீ. பீரங்கி துப்பாக்கிகள், சேத்தக் ஹெலிகாப்டர்கள், குண்டு துளைக்காத கவச உடைகள் போன்ற பல்வேறு உள்நாட்டுத் தயாரிப்புகளும் சர்வதேச சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளன.
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல், ஏற்றுமதியை விரிவுபடுத்துதல் மற்றும் தொழில்நுட்பப் புதுமைகளைத் தழுவுதல் மூலம், கடந்த பதினொரு ஆண்டுகளில் பாரதம் உண்மையான தற்சார்பு (Self-reliance) நிலையை நோக்கி பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. பாரதம் இனி தன் எல்லைகளைக் காப்பது மட்டுமல்ல; அது வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட ராணுவ சக்தியாக உலக அரங்கில் உறுதியாக எழுந்து நிற்கிறது.