“டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்க-ழகத்தின் வினாத்தாளில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கேள்வி இடம் பெற்ற விவகாரத்தில் பேராசிரியரை இடை-நீக்கம் செய்து ஒன்றிய கல்வியமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“பி.ஏ. ஹானர்ஸ் இளநிலை மாணவர்களுக்கு பருவ தேர்வு சமூகப்பணி பிரிவின் ஒரு கேள்வித் தாளில், 15 மதிப்பெண்-ணுக்கான ஒரு கேள்வியும் இடம் பெற்றிருந்தது. அதில், “பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான அட்-டூழியங்களை பற்றி விவரிக்கவும்” என கேட்கப்பட்டிருந்தது.

“இந்த கேள்வி பாடங்களுக்கு எந்த வகையில் தொடர்புடை-யது என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்தன. இதையடுத்து, அந்த கேள்வித்தாளை தயாரித்த பேராசிரியர் வீரேந்திர பாலாஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.”

இது திமுக நாளேடான ‘முரசொலி’ இணையதளம் டிசம்பர் 27 அன்று வெளியிட்டுள்ள செய்தி. இந்த செய்திக்கு அந்த நாளேடு கொடுத்துள்ள தலைப்பு: “இஸ்லாமியர்களுக்கு எதிரான கேள்வி இடம் பெற்ற விவகாரம்”!

இஸ்லாமியர்களுக்கு எதிரான அட்டூழியங்களை விவரிக்கச் சொல்லிக் கேட்டால் அது எப்படி “இஸ்லாமியர்களுக்கு எதிரான கேள்வி” ஆக முடியும்? முரசொலி ஆசிரியருக்கே வெளிச்சம்! திமுகவுக்கு எதிரான அட்டூழியங்களை நாளை முரசொலி கட்டுரையாளர் யாராவது விவரித்தால் அது திமுகவுக்கு எதிரான செயல் என்று முரசொலி முத்திரை குத்துமோ என்னவோ? ஒருவேளைஅந்த நாளேட்டு நிர்வாகம் கட்டுரை எழுதியவரை இடைநீக்கம் செய்யுமோ என்னவோ? நல்ல கூத்து!

செய்திக்கு இந்த லட்சணத்தில் தலைப்பு கொடுக்கும் இதழியல் பாரம்பரியம் அந்த நாளேட்டுக்கே உரியது. 70களில் ஒரு நாள் இதே முரசொலி, ‘பிரதமர் படுகொலை’ என்று கொட்டை எழுத்தில் போஸ்டர் அச்சிட்டு கடைக்கு கடை தொங்க விடும் கீழ்த்தரமான செயலை செய்தது; எடுத்த எடுப்பில் அது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது (படுகொலை செய்யப்பட்டவர் இலங்கை பிரதமர் என்பது அன்றைய செய்தி!).

‘இன்றைய செய்தி நாளைய வரலாறு’ என்று முரசொலியின் ஒரு பழைய விளம்பர வாசகம் பிரகடனம் செய்கிறது. முஸ்லிம் வாசகர்களை (அதாவது வாக்காளர்களை) குஷிப்படுத்த இது போல செய்திக்கு தவறான தலைப்பு கொடுத்து திரித்து செய்தி வெளியிட்டு தன்னுடைய நாளைய வரலாற்றையே ஒரு கை பார்க்கிறது முரசொலி.

இந்த மொத்த விவகாரத்திலும் பக்கவாட்டில் அம்பலமானது, ‘துல்லியமான தமிழுக்கும் முரசொலிக்கும் காத தூரம்’ என்ற சங்கதிதான்! பாவம் தமிழ்!!