5 லட்சம் டன் அரிசி தர மலேஷியா கோரிக்கை

உலகின் மிகப் பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, உள்நாட்டில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நட்பு நாடுகளின் உணவுத் தேவைகளை கருத்தில் கொண்டு, அந்நாடுகளுக்கு மட்டும் தேவையான அரிசியை மத்திய அரசு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது.

இந்நிலையில், மலேஷியாவுக்கு இந்தியா முன்னர் ஒதுக்கிய 1.70 லட்சம் டன் அரிசியுடன், கூடுதலாக 5 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்வதற்கான கோரிக்கையை இந்தியாவிடம் சமர்ப்பிக்க உள்ளதாக, அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். வழக்கமாக, மலேஷியாவின் அரிசி நுகர்வு ஆண்டுக்கு 25 லட்சம் மெட்ரிக் டன்னாகும். இதில், சராசரியாக 7.50 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டு, தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் நடந்த சந்திப்புக்கு பின், மலேஷியா வேளாண் அமைச்சர் முகமது சாபு, தன் முகநுால் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கூடுதல் அரிசி கொள்முதல் குறித்து, இந்தியாவுக்கு, அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை அனுப்பப்படும்” என தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரியில், இந்தியாவிடம் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்வதற்கான கோரிக்கையை மலேஷிய அரசு சமர்ப்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஒதுக்கிய 1.70 லட்சம் டன் அரிசியுடன், கூடுதலாக 5 லட்சம் டன் அரிசி வழங்குமாறு மலேஷியா கேட்டுக்கொண்டுள்ளது