2047க்குள் 47 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடு

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் புனேவில் நடைபெற்ற ஆசிய பொருளாதார கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகையில், “இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக பாரதம் உருவெடுக்கும். 2047ம் ஆண்டுக்குள் நமது பொருளாதாரத்தை 35 முதல் 40 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த முடியும் என நான் நம்புகிறேன். பாரதம் தற்போது வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இருப்பது மட்டுமல்ல, அது இன்னும் பல ஆண்டுகளுக்கு இது தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கும். பாரதம் ஏற்கனவே பத்தாவது பெரிய பொருளாதார நாடு என்ற இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்று பாரதத்திடம் இளைஞர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இது அதன் மிகப்பெரிய பலமாக உள்ளது. வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில், ரஷ்யா உக்ரைன் மோதல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இரண்டிலுமே பெரிய விளைவை ஏற்படுத்தியுள்ளன. பாரதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 88 நாட்களில் விரைவாக கையெழுத்தானது. ஆஸ்திரேலியாவுடனும் குறுகிய காலப் பேச்சுவார்த்தையில் விரைவான முறையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பாரதத்துடன் இணைந்து பணியாற்றுவதில் உலக நாடுகள் உற்சாகம் காட்டுகின்றன. இஸ்ரேல், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடனும் ஐரோப்பிய யூனியனுடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பாரதம் பேச்சு நடத்தி வருகிறது. பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை பொறுப்பான முறையில் எதிர்கொள்வதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில் சுழற்சிப் பொருளாதாரத்தை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. பருவநிலை மாற்ற இலக்குகளை அடைவதில் முன்னணியில் உள்ள ஐந்து நாடுகளில் ஒன்றாக பாரதம் உள்ளது. உலகப் பொருளாதாரத்திற்கு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றார். எனவே, பாரதத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும், மக்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் மிக முக்கிய சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பாரத இளைஞர்களின் ஆற்றல், நாட்டின் பொருளாதாரத்தை, 2047ம் ஆண்டுக்குள், 47 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற உதவும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.