”புற்றுநோய்க்கான 90 மருந்துகளில், இந்தியா 42 மருந்துகளை மிகவும் மலிவுவிலையில் வழங்கி வருகிறது,” என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். சில தனியார் அமைப்புகள் இணைந்து, புற்று நோய் தொடர்பான தகவல்கள், சிகிச்சை முறைகள், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கும், ‘சஞ்சீவினி’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
புதுடில்லியில் நேற்று முன்தினம் நடந்த இதன் துவக்க விழாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை என்பது, அரசியலுக்கும், வர்த்தகத்துக்கும் அப்பாற்பட்டது. இதை மக்களுக்கான சேவைத் துறையாக இந்த அரசு கருதுகிறது.
கடந்த 2014ல் ஆட்சி அமைத்ததில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்தத் துறையை நாட்டின் வளர்ச்சிக்கானதாக கருதுகிறது.
இதன்படியே, மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய, ஆயுஷ்மான் பாரத் எனப்படும் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை உருவாக்கி உள்ளோம். மருந்து தயாரிப்பு துறையில் உலகின் மையமாக நம் நாடு விளங்குகிறது. அனைத்து தரப்பினரும் இணைந்து, நாட்டு மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டும். கொரோனா காலத்தில் இதற்கான பலன் நமக்கு கிடைத்துள்ளதை கண்கூடாக பார்த்துள்ளோம். புற்றுநோய்க்கான 90 மருந்துகளில், 42 மருந்துகளை இந்தியா மிகவும் குறைந்த விலையில் அளித்து வருகிறது. புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.