கர்ப்ப கால நீரிழிவு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. “கெஸ்ட்டேஷனல் டயபட்டீஸ் மெலிட்டஸ்” என இதை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஏற்கெனவே நீரிழிவு நோய் இல்லாத பெண்கள் கருத்தரிப்புக்கு உட்பட்டு இருக்கும் நிலையில், அவர்களது இரத்த சர்க்கரையின் அளவு உயர்ந்து காணப்படும் நிலைதான், `கர்ப்ப கால நீரிழிவு’ என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கருத்தரிப்பு காலத்தில் முதல் டிரிமெஸ்டர் காலத்தில், அதாவது சுமார் 13 வாரங்களுக்கு உள்ளாகவே இதற்கான அறிகுறிகள் தென்படும்.
உடல் பருமன், கர்ப்ப கால நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை உக்கிரப்படுத்தும் பிரதான காரணி என்பதை மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கர்ப்ப கால நீரிழிவுக்கு உணவு முறை முக்கியக் காரணம் என்று கூறப்படவில்லை. எனினும், ஆரோக்கியமான உணவை கர்ப்பிணிகள் சாப்பிடாமல் தவிர்த்து வந்தால், கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக் கூடும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
கர்ப்ப கால நீரிழிவு சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். குளிர்காய்ச்சல், மனத்தளர்ச்சி போன்றவை ஏற்படும். மேலும் சிறுநீர் கழிக்க அடிக்கடி தூண்டுதல், வாய் உலர்ந்து போதல், அடிக்கடி ஏற்படும். குமட்டல் உணர்வு, பார்வை மங்குதல், இனிப்பு உணவுகளை அடிக்கடி சாப்பிட விரும்பும் அதீத ஆசை போன்றவை முக்கிய அறிகுறிகள் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கர்ப்ப கால நீரிழிவால், சிலருக்கு உரிய காலத்துக்கு முன்பாகவே குழந்தை பிறந்து விடும். இப்படி பிறக்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவையாக இருக்கும். இதனால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
`பருவத்தே பயிர்செய்’ என்பது ஆழ்ந்த அர்த்தமுள்ள பழமொழியாகும். இது திருமண வாழ்வுக்கும், குழந்தை பேற்றுக்கும் பொருத்தமானதுதான். காலந்தவறி விட்டால் விரும்பத்தகாத விளைவுகளை கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் அனுபவம் போதிக்கும் பாடமாகும்.
கர்ப்ப கால நீரிழிவுக்கு ஆட்படுவோரில் 20 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. ஆனால், 40 வயதைக் கடந்த பெண்கள் கருத்தரிக்கும் போது, அவர்களில் சுமார் 3ல் இரு பங்கினருக்கு கர்ப்ப கால நீரிழிவு ஏற்படுகிறது என்பதை மருத்துவ தரவுகள் புலப்படுத்துகின்றன.
சர்வதேச அளவில் 15.6 சதவீத பெண்களுக்கு கர்ப்ப கால நீரிழிவு ஏற்படுகிறது. ஆனால் பாரதத்தில் இந்த அளவு அதிகமாக உள்ளது. நம் நாட்டில் 19.2 சதவீத பெண்களுக்கு கர்ப்ப கால நீரிழிவு ஏற்படுகிறது. பொதுவாக பழங்குடியினரிடையே கர்ப்ப கால நீரிழிவு அதிகமாக இல்லை.
அவர்களது வாழ்க்கை முறை, உடல் உழைப்பு, மூலிகை நுகர்வு போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நம் நாட்டில் மத்திய பிராந்தியத்தில் 32.9 சதவீத பெண்கள் கர்ப்ப நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர். வடக்குப் பிராந்தியத்தில் இது 31.4 சதவீதமாகவும், தெற்கு பிராந்தியத்தில் 24.2 சதவீதமாகவும் உள்ளது.
இதர பிராந்தியங்களில் இது தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. கிழக்குப் பிராந்தியத்தில் இது 17.9 சதவீதமாகவும், வடகிழக்கு பிராந்தியத்தில் 16.6 சதவீதமாகவும், மேற்கு பிராந்தியத்தில் 16 சதவீதமாகவும் உள்ளது.