ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதற்கு, ஒட்டுமொத்த உலகமும் ஆதரவு தெரிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
நமது நாடு சுதந்திரமடைந்தபோது, 631 சமஸ்தானங்கள் இருந்தன. இதில், 630 சமஸ்தானங்களை அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல் கையாண்டார். காஷ்மீர் மட்டும் நேருவால் கையாளப்பட்டது. அந்த 630 சமஸ்தானங்களும் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்பட்டன. ஆனால், காஷ்மீர் மட்டும் பிரச்னையாக நீடித்து வந்தது.
கடந்த 1947-இல் இந்திய-பாகிஸ்தான் போரின்போது, இந்திய ராணுவத்தினர் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த தருணத்தில், நேரு எந்த அவசியமும் இல்லாமல் போர் நிறுத்தத்தை அறிவித்தார். அவ்வாறு அறிவிக்காமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இப்போது இந்தியாவின் அங்கமாகியிருக்கும்.
காஷ்மீர் விவகாரத்தில், கடந்த 1948-இல் ஐ.நா.வை அணுகியது நேரு செய்த இமாலயத் தவறாகும்.
370ஆவது பிரிவு குறித்து தவறான தகவல்கள்: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அந்தப் பிரிவால், ஜம்மு-காஷ்மீருக்கு கிடைத்த ஒரு நன்மையையாவது குறிப்பிட முடியுமா? கல்வி உரிமைச் சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட 106 சட்டங்களை அங்கு அமல்படுத்த முடியாத நிலை இருந்தது. 370-ஆவது சட்டப் பிரிவு, பல்வேறு ஊழல்களுக்கு காரணமாக இருந்தது. அந்தப் பிரிவை நீக்கியதன் மூலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் முழுமையாக மாறியுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை காரணமாக, அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டிலேயே வளர்ச்சி மிகுந்த பகுதியாக ஜம்மு-காஷ்மீர் மாறும். இந்த முடிவு, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு வலுசேர்க்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாகும்.
காஷ்மீரில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் பயங்கரவாதத்தால் சுமார் 41 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர். பாதுகாப்புப் படையினர் மீதான பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்தோ, பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் மனைவிகள் மற்றும் குழந்தைகளின் நிலை குறித்தோ யாரும் பேசுவதில்லை.
மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி: ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தையொட்டி, நியூயார்க்கில் சுமார் ஒரு வாரம் உலக நாடுகளின் தலைவர்கள் கூடியிருந்தனர். எந்த நாட்டின் தலைவரும் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எழுப்பவில்லை. இது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கிடைத்த ராஜீய ரீதியிலான மிகப் பெரிய வெற்றியாகும். இதன் மூலம், 370-ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட நடவடிக்கைக்கு, ஒட்டுமொத்த உலகமும் ஆதரவளிப்பது தெளிவாகிறது.
காஷ்மீரில் உள்ள 196 காவல் நிலையங்களில், வெறும் 8 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டுமே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
அப்பகுதிகளில், பொது இடத்தில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. காஷ்மீர் நிலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 மாதங்களில் புதிதாக 10,000 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு செல்லிடப்பேசி சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை மனித உரிமை மீறலாக கருத முடியாது என்றார் அமித் ஷா.