மராட்டிய மன்னராக வீரசிவாஜி முடிசூடியதன் 350-வது ஆண்டு விழா: சென்னை காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு பூஜை

சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் மராட்டிய மாமன்னர் வீரசிவாஜி சுவாமி தரிசனம் செய்ததன் 347-வது ஆண்டு விழா கொண்டாட்டம் இண்டோய் சமுடே அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடைபெற்றது. மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக வீரசிவாஜி கடந்த 1674-ம்ஆண்டு முடிசூட்டிக்கொண்டார். பின்னர், தென்னிந்தியாவுக்கு விஜயம் செய்த அவர், 1677-ம் ஆண்டு அக்.3-ம் தேதி (நேற்றைய தினம்) சென்னை வந்து புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இருந்த காளிகாம்பாள் கோயிலில் சுவாமிதரிசனம் செய்துள்ளார். இக்கோயிலில் இதற்கான குறிப்புகள், புகைப்படம் ஆகியவை உள்ளன.

இந்நிலையில், மராட்டிய மன்னராக வீரசிவாஜி பொறுப்பேற்றதன் 350-வது ஆண்டு விழா மற்றும் சென்னை வந்து காளிகாம்பாளை அவர் தரிசனம் செய்ததன் 347-வதுஆண்டு விழா கொண்டாட்டம் இண்டோய் சமுடே அறக்கட்டளை சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள மராட்டிய மண்டல் அரங்கில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. விழா மலரை அறக்கட்டளையின் மேலாண் இயக்குநர் பரத் கோபு வெளியிட்டார். தொடர்ந்து, சிவாஜி போர்த் தளபதியின் வம்சாவளியை சேர்ந்த விக்ரம் சிம்ஹா மோங்ஹிதா பங்கேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தஞ்சை இளவரசர் சிவாஜி ராஜே போன்ஸ்லே, லைஃப் லைன் மருத்துவமனை தலைவர் ஜே.எஸ்.ராஜ்குமார், ஆர்கனைசர் இதழ் ஆசிரியர் பிரபுல்ல கிட்கர், ஆன்மிகப் பாடகர் கணேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜார்ஜ் டவுன்பகுதியில் தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து அனைவரும் வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சி குறித்து பரத்கோபு கூறியதாவது: வீரசிவாஜிபொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சென்னைக்குதான் வந்துள்ளார். அப்போது, புனித ஜார்ஜ்கோட்டை வளாகத்தில் இருந்தகாளிகாம்பாள் கோயிலில் தரிசனம்செய்தார். அதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், அந்தகோயில் இடிக்கப்பட்டு அங்கு தேவாலயம் கட்டப்பட்டது. அதன்பின்னர் ஜார்ஜ் டவுனில் கோயிலுக்கு இடம் வழங்கப்பட்டு அங்கு காளிகாம்பாள் கோயில் அமைக்கப்பட்டது என்றார்.