பாரதம் சேமித்த 35,000 கோடி

ரஷ்ய எண்ணெய்யை தள்ளுபடி விலையில் வாங்கியதால் பாரதத்துக்கு 35,000 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கியதையடுத்து, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கும் அதன் வழக்கமான வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் எண்ணெய் வாங்குவதை குறைத்தனர். இதையடுத்து ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியை வழங்கியது. கச்சா எண்ணெய் விலைகள் சர்வதேச சந்தையில் அதிகப்படியாக உயர்ந்த சூழலில், மத்திய அரசு, தனது நாட்டு மக்களின் நலனை கருதி மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்கியது. மேற்கத்திய நாடுகளின் கடும் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியது. இப்போது ரஷ்யா பாரதத்தின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் வினியோகஸ்தர் என்ற நிலையை எட்டியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் எண்ணெய் வாங்கும் நாடுகளில் பாரதம் இரண்டாவது இடத்தில் உள்ளது. விலை மலிவான கச்சா எண்ணெய், நாட்டின் பொருளாதாரத்தின் மேக்ரோ பொருளாதார அம்சங்களில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இறக்குமதி செலவுகளை குறைப்பதன் மூலமும், நாணயத் தேவையைக் குறைப்பதன் மூலமும் நாட்டின் செலவினங்களைக் குறைக்கவும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவும். உலக எண்ணெய் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும்போது அதனை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொண்டு பாரதத்தின் வெளிநாட்டு நிதியை மத்திய அரசு சேமிப்பது இது இரண்டாவது முறை. முன்னதாக, கொரோனா தொற்றுநோய் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோது, ​​2020ல் ரூ. 25,000 கோடியை நாம் சேமிக்க முடிந்தது. இதனை பயன்படுத்தி பாரதம் அதன் மூலோபாய சேமிப்புகளையும் நிரப்பிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.