‘பக்தி’ விளக்கம் வேண்டுகிறேன்?
– கே. பாலு, நாகப்பட்டினம்
அனுமாரிடம் ஒருவர் இன்று என்ன திதி?” என்று கேட்கிறார், அதற்கு அனுமார், ஐயா, எனக்கு நாள், கிழமை, நட்சத்திரம் எதுவும் தெரியாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் எனது ‘ஸ்ரீராமன்’ மட்டுமே. நான் சதா எனது ராமனை தியானித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். இதுதான் பக்தி.
விதிப்படி நடக்கும் என்ற பழமொழி மனிதன் முயற்சிக்கு தடை விதிக்கிறதா?
– ரமா ராமச்சந்திரன், கடலூர்
நமக்கென்று என்ன நிச்சயிக்கப்பட்டதோ அதுதான் நடக்கும். ஆனாலும் கூட கடின உழைப்பு, நேர்மை, அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை ஆகியவை விதியால் வரும் துன்பங்களை எதிர்கொள்ளக் கூடிய சக்தியைத் தரும்.
ஒரு சில மனிதர்களை கடவுளுக்கு நிகராக வழிபடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
– கே. சரவணன், கோவை
காவி உடை தரித்தவர்கள் எல்லாம் மகான்கள் இல்லை. நமக்கு போலி எது, உண்மை எது என்று பகுத்தாய தெரிந்திருக்க வேண்டும். எளிமை, நேர்மை, தூய்மை, பெயர் புகழ் விரும்பாமை போன்ற குணங்கள் உள்ள மகான்கள் வழிபடத் தகுந்தவர்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர், வள்ளலார், ரமண மகரிஷி, காஞ்சி பரமாச்சாரியார் போன்றோர் உதாரண புருஷர்கள்.
பரதனாரே… சமீபத்தில் முகநூலில் படித்ததில் பிடித்தது எது?
– வி. வரதராஜன், காஞ்சிபுரம்
காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒருவன் எப்படியிருக்க வேண்டும் என்று முகநூலில் ஒரு பதிவு. நமது பெற்றோர்கள் பார்த்து கல்யாணம் செஞ்சு வைச்சா கூட இப்படி ஒருத்தரைப் பார்த்து இருக்க மாட்டாங்க என்று ஒரு பெண்ணை நினைக்க வைப்பவன்தான் உண்மையான காதலன்”. சரிதானே!
கமல் அரசியல் பிரவேசம் பற்றி?
– செந்தமிழ்ச் செல்வன், பொன்பரப்பி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மாதிரி ஒரு நடிகர் இனி பிறந்தால்தான் உண்டு. அவரது நடிப்பை அங்கீகரித்த தமிழகம் அவரது அரசியலை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் கட்சியைத் துவங்கி 1989ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் தோற்றுப்போனார். ஆடிக்காற்றில் அம்மியே பறந்தது என்றால் கமல் எம்மாத்திரம்?
சென்னையில் மழை மக்களை புரட்டி எடுத்து விட்டதா?
– சுப மீனா, பட்டாபிராம்
வழக்கமாக பெய்யும் பருவ மழைதான். கொஞ்சம் அதிகம். ஆனாலும் தேவை தான். மக்களுக்கு சற்று சிரமம்தான். ஆனாலும் டிவி சேனல்கள் செய்திகளை ஒளிபரப்பிய விதம் சகிக்கவில்லை. வெறும் அரசு எதிர்ப்பு பிரச்சாரம் தான் நடக்கிறது.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும்?
– சுசீலா சுந்தர், பாகனேரி
பாஜக வெற்றி பெறுவது நாட்டுக்கே நல்லது. நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்.