ரூ.3,000 கோடிக்கு பத்திரப்பதிவு மறைப்பு

திருவள்ளூர், திருச்சி ஆகிய இடங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடந்த ஆய்வில், 3,000 கோடி ரூபாய்க்கு மேல் நடந்த பத்திரப் பதிவுகளை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்காத அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பத்திரப்பதிவு அலுவலகங்களில், சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்யும் போது, பான் கார்டு, ஆதார் ஆகிய விபரங்களை அளிக்க வேண்டும்.

இதில், 30 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்து பத்திரப் பதிவுகள் குறித்து, பத்திரப்பதிவு அலுவலர்கள் தரப்பில், வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.அதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள், அவ்வப்போது, பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஆய்வு செய்வர். கடந்த, 2017ம் ஆண்டு முதல், அதிக மதிப்பிலான பத்திரப்பதிவுகள் குறித்து, பத்திரப்பதிவு அலுவலர்கள் அனுப்பிய விபரங்களில், வருமான வரித்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 4ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம், திருச்சி, உறையூர் ஆகிய பத்திரப்பதிவு அலுவலகங்களில், வருமான வரித்துறையின் புலனாய்வு மற்றும் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரண்டு அலுவலகங்களிலும், 20 மணி நேரத்துக்கு மேல் சோதனை நடத்தியதில், செங்குன்றம் அலுவலகத்தில், 2,000 கோடி ரூபாய்க்கு மேலும், உறையூர் அலுவலகத்தில், 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் நடந்த பத்திரப் பதிவுகளை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அது தொடர்பான ஆவணங்களை, வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளனர். பிரபல ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்கள், கடந்த ஆட்சியில் பதவிகளில் இருந்தவர்கள், தொழிலதிபர்கள் பெயரில் இந்த சொத்து பரிமாற்றங்கள் அனைத்தும் நடைபெற்றுள்ளன. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் அடிப்படையில், சொத்து பரிமாற்றம் செய்து கொண்டவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை பாயுமோ என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், வருமான வரித்துறை ஆய்வுகள் தொடர்பாக, தமிழக பத்திரப் பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு நிதியாண்டு முடிந்ததும், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களின் பத்திரப்பதிவு தொடர்பாக, விற்பவர், வாங்குபவர்களின் ஆதார் எண், பான் எண், சொத்தின் மதிப்பு ஆகிய விபரங்கள், பத்திரப்பதிவு அலுவலர்கள் வாயிலாக, வருமான வரித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என, பத்திரப்பதிவுத் துறை தலைவர், அனைத்து சார் – பதிவாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

வருமான வரித்துறை ஆய்வு நடந்த இரண்டு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், உரிய நேரத்தில் அதை செய்யத் தவறிய சார்பதிவாளர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வருமான வரித்துறையினரின் சோதனைக்கு பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் ஒத்துழைப்பு அளித்து, அவர்கள் கேட்ட ஆவணங்களையும் கொடுத்துள்ளனர்.மேலும், ஆய்வு நடந்த இரு அலுவலகங்களில் நடந்த பத்திரப்பதிவுகள் குறித்து வருமான வரித்துறையினர் கூடுதல் விவரங்களை கேட்டுள்ளனர். அந்தந்த சார்பதிவாளர்களிடம் கேட்டு, அவற்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.