டேட்டா என்ட்ரி வேலை, நல்ல சம்பளம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் பாரதத்தில் இருந்து சுமார் 300 பேர் வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களை ஒரு கும்பல் தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு கடத்திச் சென்று மியாவாடி பகுதியில் அவர்களை அடைத்து வைத்து சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்துவதாக தகவல் வெளியானது. அவர்கள் தங்களை காப்பாற்ற கோரி வெளியிட்ட வீடியோ மூலம் இந்த கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, மத்திய அரசு அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இவர்களை பணயக் கைதிகளாக வைத்திருப்பது சீன நாட்டைச் சேர்ந்த ‘யடாய்’ என்ற குற்றவாளி குழுவினர். மியான்மர் கிளர்ச்சியாளர்கள் அல்ல என்ற செய்தி வெளியாகியுள்ளது. இங்கு பாரத நாட்டினர் தவிர தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாட்டவர்களும் பணயக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது. இந்த சீன ‘யடாய்’ குற்றக் கும்பலின் தலைவர், சீன ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக மேற்கத்திய உளவுத்துறைகள் உறுதியாக நம்புகின்றன. சர்வதேச சைபர் மோசடிகள், மனித கடத்தல், சட்டவிரோத சூதாட்டம் வரையிலான பல்வேறு குற்றச் செயல்களுக்காக அவர் பல நாடுகளால் தேடப்பட்டு வருகிறார். இந்த கும்பலை சேர்ந்த ஷி சிஜியாங் என்ற சீன பிரஜை கடந்த மாதம் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த 300 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ள பரந்து விரிந்து நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷ்வே கொக்கோ நகரம் 2017ல் சீன குழுவினருக்கு விற்கப்பட்ட மியான்மரின் ராணுவ ஆட்சிக்குழுவின் அதிகார வரம்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பகுதி என கூறப்படுகிறது. ஆயுதம் ஏந்திய சீன தனியார் காவலர்களால் இப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. இந்த பாதுகாவலர்களில் பலர் முன்னாள் சீன ராணுவ வீரர்கள். பாரத அரசாங்கத்தின் கோரிக்கைகள் மற்றும் ஷ்வே கொக்கோவில் பாரத நாட்டவர்கள் உட்பட அபல்வேறு வெளிநாட்டவர்கள் பணயக் கைதிகளாக இருப்பது பற்றிய தகவல்கள் கைவசம் இருந்தபோதிலும், மியான்மர் ராணுவத்தினரால் இந்த பணயக்கைதிகளை மீட்பது சிரமம் என்றே கூறப்படுகிறது. “ கடத்தப்பட்ட இவர்கள், நிதி மோசடிகள், மக்களை அச்சுறுத்துதல், ஃபிஷிங் உள்ளிட்ட அனைத்து வகையான சட்டவிரோத நடவடிக்கைகள் போன்ற இணைய குற்றங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்,”என்று கரேன் மனித உரிமைகள் குழுவின் உறுப்பினரான ஜூலியட் மாங் கூறியுள்ளார்.