வாரத்துக்கு 3 நாள் விடுமுறை

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தொழிலாளர் விதிமுறைகள் சுமார் 90 சதவீத மாநிலங்களில் நேற்று முதல் அமலானது. இன்னும் சில மாநிலங்கள் இதற்கான ஒப்புதலை தரவில்லை. புதிய சட்டங்களின்படி, நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தையும் 8 முதல் 9 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரம் என அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் அதை ஈடு செய்ய ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறையை நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் பார்க்கும் மொத்த வேலை நேரம் மாறாது. ஊழியர்கள் பெறும் சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஊழியரின் அடிப்படை சம்பளம், மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும். இது வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும். இதனால் ஊழியர்களுக்கு கையில் வாங்கும் சம்பளம் குறையலாம். ஆனால் ஓய்வுக்குப் பிறகு பெறும் பணிக்கொடை அதிகரிக்கும். மேலும், ஓராண்டில் 180 நாட்கள் பணி செய்திருந்தாலே புதிய ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்டு, இனி அது 240 நாட்கள் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தாலோ, பணி நீக்கம் செய்யப்பட்டாலோ அவருக்கு இரண்டு நாட்களுக்குள் ஊதியம் மற்றும் நிலுவை தொகைகளை முழுமையாக நிறுவனம் செலுத்த வேண்டும். இந்த புதிய தொழிலாளர் விதி வேலையை சிறப்பாக நிர்வகிப்பதற்கும், சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்துவதற்கும் உதவும், நாட்டில் முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என மத்திய அரசு கருதுகிறது. ஆனால் இந்த விதிகள் கட்டாயம் அல்ல. நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே நெகிழ்வுத் தன்மையுடன் செயல்படுத்தலாம்.