சென்னை – கோவை உட்பட மூன்று வழித்தடங்களில் அதிவேக ரயில் இயக்குவது குறித்த ஆய்வு அறிக்கையை, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. தமிழகத்தில், வெளியூர் செல்ல பலரும் ரயில் சேவையை விரும்புகின்றனர். இதுவே, மற்ற போக்குவரத்துகளை விட செலவு குறைவானது. மாநிலம் முழுதும் பயணியரின் போக்குவரத்து நேரத்தை குறைக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, புதிய வழித்தடங்களில் ரயில் சேவை மற்றும் ஏற்கனவே உள்ள வழித்தடங்களில், அதிவேக ரயில் வழித்தடங்களை இயக்க ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள ரயில் வழித்தடங்களுடன் இணைக்கப்பட வேண்டிய புதிய இடங்களை கண்டறியவும், ரயில் வழித்தடத்தை மேம்படுத்தவும், ‘டிட்கோ’ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், தனியார் நிறுவனம் வாயிலாக ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில், எந்த வழித்தடத்தில் ரயில் சேவைக்கு அதிக தேவை உள்ளது; புதிய ரயில் வழித்தடங்கள் எந்த இடத்தில் தேவைப்படுகிறது, ஏற்கனவே இருக்கும் ரயில்களில் எந்த வழித்தடத்தில் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
‘ஏ.ஏ.ஆர்.வி.இ.இ., அசோசியேட்ஸ்’ என்ற ஒப்பந்த நிறுவனம், தன் ஆய்வு அறிக்கையை டிட்கோவிடம் வழங்கியது. அந்த அறிக்கையை டிட்கோ, அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில், சென்னை – கோவை; சென்னை – மதுரை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் – மதுரை ஆகிய வழித்தடங்களில் அதிவேக ரயில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ‘புதிய வழித்தடங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும். இதற்கு அதிக காலம் ஏற்படுவதுடன், செலவும் அதிகரிக்கும். இதை தவிர்க்க, ஏற்கனவே முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில் வழித்தடங்களில், ‘கர்வ்’ எனப்படும் வளைவு பாதை உள்ள இடங்களில் அதற்கு பதில், ‘ஸ்டெர்ய்ட் லைன்’ அமைப்பதால், குறைந்த செலவில் வழித்தடத்தை மேம்படுத்த முடியும்’ என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது, வந்தே பாரத் ரயில் தான் ஒரு மணி நேரத்திற்கு, 160 கி.மீ., வேகத்தில் செல்கிறது. அதிக வேக ரயில் என்பது ஒரு மணி நேரத்திற்கு, 200 கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த ரயில் தமிழகத்தில், மூன்று வழித்தடங்களில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு, ஆய்வு அறிக்கையை ரயில்வே துறையிடம் சமர்ப்பித்து, அதற்கு ஏற்ப, ரயில் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துமாறு வலியுறுத்தும். புதிய மற்றும் மேம்படுத்தப்படும் ரயில் வழித்தடங்களால், தற்போது உள்ள ரயில் போக்குவரத்து நெரிசல் குறையும்; மேலும், கூடுதல் ரயில் இணைப்பை ஏற்படுத்துவதால், மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.