டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்போதைய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ கடந்த பிப்ரவரி 26ம் தேதி சம்மன் அனுப்பியது. அவரிடம் நடந்த 8 மணிநேர விசாரணையில் அவர் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனையடுத்து சிசோடியாவைக் சி.பி.ஐ கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர் அவரை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து அவரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து மணீஷ் சிசோடியா திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, சிறையில் உள்ள விசாரணை நடத்த உள்ளூர் நீதிமன்றத்திடம் அமலாக்கத்துறை அனுமதி பெற்றது. அதனையடுத்து நேற்று மணீஷ் சிசோடியா டெல்லியின் கலால் துறை அமைச்சராக இருந்தபோது அவரிடமிருந்த அலைபேசிகள் அடிக்கடி மாற்றப்பட்டு அதில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டது தொடர்பாகவும், மதுபானக் கொள்கை அமலாக்கம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.