ஜம்மு காஷ்மீரில் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி உதம்பூர், ஏப்ரல் 26-ம் தேதி ஜம்மு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. உதம்பூரில் 68.27 சதவீத வாக்குகளும் ஜம்முவில் 72.22 சதவீத வாக்குகளும் பதிவாகின.
இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தேசிய மாநாடு கட்சி சார்பில் அகா ரகுல்லா, மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் வகீத் பாரா, ஜே.கே.அப்னி கட்சி சார்பில் அட்லப் புகாரி ஆகியோர் இடையே பலப்பரீட்சை நடைபெறுகிறது. பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை.
ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலில் 38 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். கடந்த 1996-ம் ஆண்டில் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் 40.9 சதவீத வாக்குகள் பதிவாகின. அதன்பிறகு தீவிரவாத பிரச்சினை காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக குறைந்தது.
கடந்த 1998-ல் 30%, 1999-ல் 11.9%, 2004-ல் 18.5%, 2009-ல் 25.5%, 2014-ல் 25.8%, 2017-ல் 7.1%, 2019-ல் 14.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. இதன்படி 1998-ம் ஆண்டுக்குப் பிறகு ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் தற்போது அதிகபட்ச வாக்குகள் பதிவாகி உள்ளன.