பரதன் பதில்கள்

ஆன்மீக  வாழ்க்கை  என்றால்  என்ன?

– கே. சங்கரநாராயணன், சேலம்

இறைவா! நான் உன்னிடம் முழுமையாகச் சரணடைகிறேன். நான் உனது கருவி. என்னை வழி நடத்துவது உன் பொறுப்பு என்று மனப்பூர்வமாக பிரார்த்தித்து நமது கடமைகளை மிகச் சரியாக செய்வதுதான் ஆன்மீக வாழ்க்கை.

 

 

* பரதனாரே! தாங்கள் சமீபத்தில் முகநூலில் படித்து ரசித்தது எது?

– வி. பார்த்தீபன், திருச்சி – 2

ஒரு தேனியிடம் ஒரு பறவை கேட்டது: ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனைத் தயாரிக்கிறாய். ஆனால் மனிதன் அந்தத் தேனை உன்னிடமிருந்து திருடி விடுகிறான் அதற்காக நீ வருந்துவதில்லையா?” அதற்கு அந்தத் தேனி பதிலளித்தது: இல்லவே இல்லை. ஏனென்றால் மனிதன் என்னிடமிருந்து தேனை மட்டுமே திருட முடியும். ஆனால் தேனை உண்டாக்கும் கலையை ஒருபோதும் என்னிடமிருந்து திருட முடியாது” என்னே ஒரு அற்புதமான மனப்பான்மை.

 

 

சிக்கல்  சிங்கார  வேலர்  கோயிலின்  சிறப்பென்ன?

– எஸ். பாஸ்கர், பெரம்பூர்

சூரபத்மனை வெல்வதற்காக முருகப்பெருமான் தன் அன்னையிடம் வேல் வாங்குகிறார். வேலின் வெப்பம் தாங்காமல் முருகனின் முகம் முழுவதும் வியர்த்துக் கொட்டும். மெய்சிலிர்க்கும் இந்தக் காட்சியை சூர சம்ஹாரம் அன்று இன்றும் பார்க்க முடியும். ஒருமுறை கந்த சஷ்டி விரதம் இருந்து சென்று தரிசித்து வாருங்களேன்!

 

 

விதண்டாவாதமான  கேள்விகளுக்கு  எப்படி  பதில்  சொல்வது?

– சி. ஜெயசங்கர், கன்னியாகுமரி

குண்டக்க மண்டக்கன்னு என்று எதிர்க் கேள்வி கேட்க வேண்டியதுதான்.

 

 

அதிமுக அணிகள் இணைய வேண்டும் என்பதில் மோடிக்கு ஏன் இந்த ஆர்வம்?

– வி. சந்திரசேகரன், தஞ்சாவூர்

ஒரு கட்சியை உடைப்பதுதான் தப்பு. சேர்ப்பது நல்லது தானே.

 

 

 

தமிழ்நாட்டில்  காணப்படும்  சினிமா  மோகம்,  நாயகன்  வழிபாடு,  சுவரொட்டி கலாச்சாரம்  அகல  என்ன  வழி?

– எஸ். ஸ்ரீனிவாசன், மந்தைவெளி

ஒரு சிறிய கோட்டை அழிக்காமல் அதை சிறியதாக்க பக்கத்தில் ஒரு பெரிய கோடு போடவேண்டும். அதுபோல கீழானது அகல உயர்ந்த லட்சியம் இளைஞர்களிடையே உருவாக வேண்டும். அதைத் தான் ஆர்.எஸ்.எஸ். செய்து வருகிறது.

 

 

* கம்யூனிஸ்ட்  கட்சி  இரண்டாக  உடைந்தது  ஏன்?

– எம். முத்துக்குமார், கோயம்புத்தூர்

இந்தியாவின் மீது 1962 சீனா படையெடுத்தபோது பாரத பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து தப்ப இந்திய கம்யூனிஸ்டுகள் இரண்டாகப் பிரிந்து செயல்படத் தொடங்கினார்கள். சீனாவின் செயலை ஆதரித்தவர்கள் இடதுசாரிகள் (மார்க்சிஸ்ட்) என்றும் எஞ்சியவர்கள் வலதுசாரிகள் (சி.பி.ஐ.) என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், பூபேஷ் குப்தா, பி. ராமமூர்த்தி போன்றோர் மாசேதுங் பாரதத்தை மீட்க வருகிறார் என்று பேசினார்கள்!