காதல் திருமணத்துக்கு 25,000 அபராதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தொகரப்பள்ளி கிராமத்தில், ஜாதி மறுப்பு திருமணம் மற்றும் காதல் திருமணம் செய்வோர், ஊர் பஞ்சாயத்துக்கு ரூ.25,000 அபராதம் செலுத்த வேண்டுமென்ற கட்டுப்பாடுகள் நிலவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், ஊர் மணியக்காரர் என்ற பெயரில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இருவரை நியமித்து, அவர்களின் மூலமாக இந்தக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருகின்றனர். இக்கிராமத்தில் நிலவும் இந்தக் கட்டுப்பாட்டால், சமீபத்தில் ஒரு குடும்பத்தினர் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் மகனான கோபி, கடந்த ஜனவரியில், அத்திப்பள்ளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். கிராமத்தின் கட்டுப்பாட்டை கோபியின் குடும்பம் மீறியுள்ளது எனக்கூறி, அந்த ஊரின் மணியக்காரராக உள்ள அறிஞர், கோபி குடும்பத்துக்கு அபராதம் விதித்தார். அபராதம் கட்டத்தவறினால் ஊரை விட்டு தள்ளி வைப்பதுடன், அவர்கள் குடும்பத்துடன் யார் பேசினாலும் அவர்களும் பஞ்சாயத்துக்கு ரூ.10,000 அபராதம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த மணியக்காரர் தி.மு.க ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால், சொந்த ஊருக்குள் கோபியின் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது.கடந்த மாதம், நாகராஜின் தாயார் இறந்தபோதுகூட இறுதிச்சடங்கில் கிராம மக்கள் யாரும் பங்கேற்கவில்லை.இந்த செய்தி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இது உண்மைக்குப் புறம்பானது; இங்கு அப்படியெல்லாம் ஒண்றுமில்லை என மழுப்புகிறார் தி.மு.க ஒன்றிய செயலாளரான மணியக்காரர். சமூகநீதி என கூறிக்கொண்டு ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க அரசு, இப்படிப்பட்ட ஜாதி வன்கொடுமைகள், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரான பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகள், அதனை பின்பற்றி வரும் தனது சொந்த கட்சிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.