2035ல் இந்திய விண்வெளி நிலையம் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்

வரும் 2035க்குள், விண்வெளியில் முதல் இந்திய விண்வெளி நிலையத்தை அமைக்கவும், 2040க்குள் முதல் இந்தியரை நிலவுக்கு அனுப்பவும் நம் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன.

இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்துக்கு ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து, 400 கி.மீ., துார சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் வாயிலாக வீரர்களை அனுப்பி, ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஆய்வு மேற்கொண்டு, பின் பூமிக்கு திரும்புவதே, ‘ககன்யான்’ திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்துக்கான முதற்கட்ட சோதனை வரும், 21ம் தேதி துவங்குகிறது. விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, வங்காள விரிகுடாவில் தரை இறங்கியதும் அதை அங்கிருந்து மீட்பது உள்ளிட்ட பணிகள் இந்த முதற்கட்ட ஒத்திகையில் நடத்தப்பட உள்ளன.

இதற்கான ஆயத்த பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். அப்போது இந்திய விண்வெளி திட்டங்களின் எதிர்காலம் குறித்து விஞ்ஞானிகளுடன் பிரதமர் உரையாடினார். ‘ககன்யான்’ திட்டம் வரும், 2025ல் திட்டமிட்டபடி ஏவப்படுவதற்கு தேவையான தயார் நிலைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அப்போது நம் எதிர்கால விண்வெளி திட்டங்கள் குறித்து விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது, வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையிலான பயணங்களை நோக்கி விஞ்ஞானிகள் பணியாற்ற வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். சந்திரயான் – 3, ஆதித்யா எல்1 திட்டங்களை போலவே புதிய லட்சியங்களை நாம் இலக்காக கொள்ள பிரதமர் அறிவுறுத்தினார். வரும், 2035க்குள் விண்வெளியில் முதல் இந்திய விண்வெளி நிலையத்தை அமைக்கவும், 2040க்குள் நிலவுக்கு முதல் இந்தியரை அனுப்பவும் நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, விஞ்ஞானிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.