2030ல் செமிகண்டெக்டர் சந்தை 109 பில்லியன் டாலராக உயர்வு

பாரதத்தை உலக நாடுகள் பலவும் உன்னிப்பாக உற்றுநோக்குகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றபோது அந்நாட்டின் அதிபர் ஜோபைடனுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். ஜோபைடனுடன் நெருக்கமான தொடர்புடைய வில்மிங்டனில் இரண்டு நாடுகளுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது. இது பாதுகாப்பு ரீதியான செமிகண்டெக்டர் தொடர்பானது.

பாரதத்தில் செமிகண்டெக்டர் தொழிற்சாலைகள் அமைக்க அமெரிக்கா உதவி செய்யும். தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கும். சர்வதேச அளவில் செமிகண்டெக்டர் உற்பத்தி நாளுக்குநாள் வேகமெடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதன் பயன்பாடு விரிவாகிக் கொண்டே வருகிறது.

செமிகண்டெக்டர் உற்பத்தியில் பாரதமும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வந்துள்ளது. பாரதம் மீது பகைமையும், வெறுப்பும் கொண்டுள்ள நாடுகளின் ஆத்திரத்தை உச்சப்படுத்தியுள்ளது. இதனால்தான் இந்த எதிரி நாடுகள் கடுமையான முறையில் எதிர்வினையாற்றி வருகின்றன. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கோபாவேசம் கொண்டுள்ளன. பாரதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் விஷமத்தனத்தை கக்கி வருகின்றன. உண்மைக்குப் புறம்பான திரிபுகளைப் பரப்பி வருகின்றன. சீன அதிபரும் அந்நாட்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளருமான ஜிஜின் பிங், பாரதத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை கிரகித்துக் கொள்ள முடியாமல் கொந்தளித்துள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அபாயகரமானது என்ற நிலைப்பாட்டில் சீனா உறுதியாக உள்ளது.

பாரதத்தின் மீது நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவர்கள் ஒப்பந்தத்தை வரவேற்கிறார்கள். மாறாக பாரதத்தின் மீது அவநம்பிக்கையும், பற்றின்மையும் கொண்டவர்கள் ஒப்பந்தத்தை மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இன்பராரெட், காலியம் நைட்ரேட், சிலிக்கான் கார்பைடு, செமிகண்டெக்டர்கள் உற்பத்தி பாதுகாப்புத் துறையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி எந்த நிலையிலும் பாரதத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் சற்றும் வளைய மாட்டார், வழுவ மாட்டார் என்பதில் தேசபக்தர்களுக்கு திடமான நம்பிக்கை உண்டு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவுடன் அப்போதைய காங்கிரஸ் அரசு செய்து கொண்டது. இந்த போர் சார்பற்ற அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு சாதகமானதே தவிர பாரதத்துக்கு சாதகமானது அல்ல என்பதை ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் பாரதத்துக்கு சாதகமானதே என்பதில் துளியும் சந்தேகத்துக்கு இடமில்லை. இருதரப்பினருக்கும் ஆதாயம் அளிக்கக்கூடிய ஒப்பந்தமாகவே இது உள்ளது என்பதை ஆய்வாளர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

பல்வேறு தொழிற்சாலைகள், குறிப்பாக ஆட்டோ மொபைல் உற்பத்தி, மொபைல்கள் உற்பத்தி, தளவாடங்கள் தயாரிப்பு போன்றவற்றில் எல்லாம் செமிகண்டெக்டர் சிப்களின் பங்கு மகத்தானதாக இருக்கும். உள்கட்டமைப்பு வசதியில் எவை எவையெல்லாம் முக்கியத்துவம் பெற்றுள்ளனவோ அவற்றுக்கெல்லாம் உள்ளீடுகளை தாராளமாக தடையின்றி வழங்கும் துறையாக செமிகண்டெக்டர் உற்பத்தித் துறை விஸ்வரூபம் எடுக்கும். தினந்தோறும் 7 கோடி சிப் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விரிவான சந்தையில் தனக்கு பங்கில்லையே என்ற எரிச்சலில்தான் சீனா விஷமத்தனத்தை விதைத்து வருகிறது. சீனாவை மட்டுமே செமிகண்டெக்டர் சப்ளைக்காக நம்பிக் கொண்டிருக்க முடியாது என்ற பின்னணியில்தான் அமெரிக்காவின் ஒத்துழைப்பை பாரதம் அகவயப்படுத்திக் கொண்டுள்ளது.

குஜராத்தில் உள்ள சனந்த் என்ற இடத்தில் அமெரிக்காவின் கேன்ஸ் செமிக்கான், ஜி.ஜி.பவர் ஒத்துழைப்புடன் செமிகண்டெக்டர் சிப்களை உற்பத்தி செய்வதற்காக 2 பிரத்யேக பிரிவுகள் அமைக்கப்பட இருக்கின்றன. மேலும் குஜராத்தில் உள்ள ததேரா என்ற இடத்தில் மற்றொரு செமிகண்டெக்டர் ஆலை அமைக்கப்படுகிறது. அஸ்ஸாமில் உள்ள மோரைகானில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் வாயிலாக செமிகண்டெக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது. தொலைதொடர்பு, வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் செமிகண்டெக்டர் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இதன்தாக்கம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும். இதை நோக்கி பாரதம் பாய்கிறது.

கட்டுரையாளர்: இயக்குனர், ஒருங்கிணைந்த வளர்ச்சி மையம், புதுடெல்லி

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி