கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி இந்த பத்திரங்கள் வெளியிடப்பட்டபோது 1 கிராம் தங்கம் 2,901 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் தற்போது 1 கிராம் தங்கத்துக்கு 7,165 ரூபாய் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால் கிராம் ஒன்றுக்கு 4,264 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட 147 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஏப்ரல் 29 முதல் மே 3ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலையை கொண்டு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம்.
1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். தங்கப் பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஐந்தாவது ஆண்டுக்கு பிறகே, முதலீட்டை முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கப்படும். இதன்படி கடந்த 2017 – 18 நிதியாண்டில் முதற்கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே திரும்பப் பெற விரும்புவோருக்கு யூனிட் ஒன்றுக்கு 7,165 ரூபாய் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டுக்கான, தங்க சேமிப்பு பத்திர எட்டாவது கட்டத்தில், ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இப்போது அவருக்கு 2.43 லட்சம் ரூபாய் கிடைக்கும்
சிறப்பம்சங்கள்
* மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது
* இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்
* தங்க பத்திரங்களில், வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்
* வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்
* இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 1 கிராம் என்ற அளவில் முதலீடு செய்ய முடியும்
* அதிகபட்சமாக தனிநபர்கள் 4 கிலோ வரையும், அறக்கட்டளை போன்றவை, 20 கிலோ வரையும் முதலீடு செய்யலாம்