2004-ம் ஆண்டு 3 பேரை கொலை செய்து தலைமறைவான முன்னாள் கடற்படை வீரர் டெல்லியில் கைது

மூன்று பேரை கொலை செய்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பாலேஷ் குமார் (60) என்ற முன்னாள் கடற்படை வீரரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு டெல்லியின் பவானா பகுதியில் ராஜேஷ் என்பவர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார். பாலேஷ் குமார் மற்றும் அவரது சகோதரர் சுந்தர் லால் ஆகியோர் இணைந்து இந்த கொலையை செய்துள்ளனர். பாலேஷ் குமாருக்கும் ராஜேஷின் மனைவிக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. மூவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியபோது இதுதொடர்பான வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது ஆத்திரத்தில் சகோதரருடன் இணைந்து ராஜேஷை முன்னாள் கடற்படை வீரர் பாலேஷ் கொலை செய்துள்ளார்.

இந்த கொலை வழக்கிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பாலேஷ்திட்டம் தீட்டினார். பின்னர் தன்னைப் போலவே வாட்டசாட்டமாக இருக்கும் பீகாரைச் சேர்ந்த மனோஜ் மற்றும் முகேஷ் ஆகிய இருவரையும் வேலைக்கு அமர்த்திய பாலேஷ், அவர்களுடன் இணைந்துசகோதரர் சுந்தர் லாலுக்கு சொந்தமான லாரியில் ராஜஸ்தானுக்கு தொழில் நிமித்தமாக சென்றுள்ளனர். லாரி ஜோத்பூரை அடைந்தபோது பாலேஷ் மட்டும் கீழே இறங்கியுள்ளார். பின்னர், மனோஜ்மற்றும் முகேஷ் ஆகிய இருவரையும் லாரியில் அடைத்து வைத்து தீவைத்து கொளுத்திவிட்டார். அங்கு, தனக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை பாலேஷ் விட்டுச் சென்றுவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் தீயில் கருகி இறந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி அவர்களில் ஒருவர்பாலேஷ் என்பதை அங்கிருந்த ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தினர்.

ராஜேஷ் தொடர்பான கொலைவழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு குற்றவாளிகளில் சுந்தர் லாலை கைது செய்துவிட்டதாகவும், பாலேஷ் லாரி தீ விபத்தில் உடல் கருகி இறந்துவிட்டதாகவும் போலீஸார் வாக்குமூலம் அளித்தனர். அத்தோடு, இந்த வழக்கும்முடிவுக்கு வந்தது. இதையடுத்து, பாலேஷ் தனது பெயரை அமன்சிங் என்று மாற்றிக்கொண்டு போலியான ஆவணங்களை உருவாக்கி கடந்த 20 ஆண்டுகளாக சந்தோஷமாக தலைமறைவு வாழ்கை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், 2004-ம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் நஜப்கரில் வசித்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்க சென்ற போலீஸார் பாலேஷை தற்போது கைது செய்துள்ளனர்.

முன்னாள் கடற்படை வீரரான பாலேஷ் குமார் தனது அடையாளத்தை மறைத்து அமன்சிங் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக டெல்லி காவல் துறை அதிகாரி ரவீந்தர் யாதவ் தெரிவித்தார். தனது கணவர் இறக்கவில்லை என்று தெரிந்தும் போலியான இறப்பு சான்றிதழை காட்டி பாலேஷ்குமாரின் மனைவி கடந்த 20 ஆண்டுகளாக ஓய்வூதிய பலன்களையும், காப்பீட்டு தொகையும் பெற்றுள்ளார். தற்போது உண்மை வெளிவந்துள்ளதையடுத்து, லாரி தீப்பிடித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு ஜோத்பூர் போலீஸாரை டெல்லி காவல் துறை கேட்டுக் கொண்டது.

ஹரியாணாவைச் சேர்ந்த பாலேஷ் குமார் 8-ம் வகுப்பு வரைபடித்தவர். கடந்த 1981—ல் கடற்படையில் சேர்ந்த அவர் 1996-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.