மத்திய கிழக்கு நாடான, பஹ்ரைனில் சுற்றுப் பயணம் செய்த, பிரதமர் மோடி, மனாமா நகரில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணர் கோவிலை, 30 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணியை, நேற்று துவக்கி வைத்தார். ”இந்த பழமையான கிருஷ்ணர் கோவில், இந்தியா – பஹ்ரைன் நாடுகளுக்கு இடையேயான நட்பின் அடையாளமாக திகழ்கிறது,” என, பிரதமர் மோடி, பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்து, நேற்று, மத்திய கிழக்கு நாடான, பஹ்ரைனுக்கு வந்தார். அவரை, பஹ்ரைன் மன்னர், கமாத் பின் இசா அல் காலிபா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.பின், மனாமா நகருக்கு வந்த மோடி, இங்குள்ள, 200 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீநாத்ஜி என அழைக்கப்படும், கிருஷ்ணர் கோவிலில், பய பக்தியுடன் தரிசனம் செய்தார்.
”உலகில் உள்ள பழமையான கோவில்களில், இந்த கிருஷ்ணர் கோவிலும் ஒன்று. இந்தியா – பஹ்ரைன் நாடுகளுக்கு இடையேயான உறவின் இணைப்பு பாலமாக விளங்குகிறது.” இந்த பழமையான கோவிலை, 30 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணியையும், அவர் துவக்கி வைத்தார். இந்த கோவில், 45 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், நான்கு அடுக்குகளை உடையதாக, சீரமைக்கப்பட உள்ளது.இந்த கோவில், 30 மீட்டர் உயரம் உடையதாக இருக்கும். இன்னும் சில நாட்களில், சீரமைப்பு பணி முழு வீச்சில் துவங்கவுள்ளது.
பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், பஹ்ரைனில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, ‘கிங் கமாத் ஆர்டர் ஆப் ரென்னிசன்ஸ்’ என்ற விருது, அவருக்கு நேற்று வழங்கப்பட்டது. பஹ்ரைன் மன்னர், கமாத் பின் இசா அல் காலிபா, விருதை வழங்கினார்.
பயங்கரவாதத்தை ஒழிக்கபஹ்ரைன் – இந்தியா உறுதி
பிரதமர் நரேந்திர மோடி, பஹ்ரைன் மன்னர், கமாத் பின் இசா அல் காலிபா மற்றும் இளவரசருடன், இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார். இதையடுத்து, இரு நாடுகள் சார்பில், கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் விஷயத்தில், உலக நாடுகள் ஓரணியில் ஒன்று திரள வேண்டும். ஒரு நாட்டுக்கு எதிராக, மற்றொரு நாடு, பயங்கரவாதத்தை பயன்படுத்தும் முயற்சியை ஒழித்து கட்ட வேண்டும்.பயங்கரவாத முகாம்கள் எங்கெல்லாம் உள்ளனவோ, அவற்றை எல்லாம் அழிக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு, நிதி உள்ளிட்ட எந்த ஆதரவையும், உதவியையும், எந்த நாடும் அளிக்கக் கூடாது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை, சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு இருந்தது.