புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, 2 லட்சம் பேர் கார்டு கிடைக்காமல் பல மாதங்களாக காத்திருக்கின்றனர். எனவே, ‘புதிய கார்டு வழங்கப்படுமா, வழங்கப்படாதா’ என்பதை வெளிப்படையாக அறிவிக்குமாறு, பாதிக்கப்பட்டவர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய உணவு பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்பு, பேரிடர் நிவாரணம் போன்றவற்றை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். தனி சமையல் அறையுடன் வசிக்கும் குடும்பத்தினர், ‘ஆதார்’ எண்ணுடன் புதிய ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதை ஆய்வு செய்து, அதிகாரிகள் கார்டு வழங்க நடவடிக்கை எடுப்பர்.
தமிழக அரசு, ரேஷன் கார்டு அடிப்படையில் மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்க பயனாளிகளை தேர்வு செய்தது. இதனால், பலரும் புதிய கார்டு கேட்டு விண்ணப்பித்தனர். இதையடுத்து, 2023 ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதுவரை, 2 லட்சம் பேர் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து, காத்திருக்கிறனர். அதில், 80,000 பேருக்கு கார்டு வழங்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்தும், கார்டு வழங்கப்படவில்லை. இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
புதிய கார்டு விண்ணப்பித்து, ஓராண்டிற்கு மேலாகியும் கார்டு வரவில்லை. தகுதியான நபர்களை கண்டறிந்து, கார்டு வழங்கலாம். யாருக்கும் தரவில்லை.
உணவு வழங்கல் உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு சென்று கேட்டால், ‘புதிய கார்டு தருவது நிறுத்தப்பட்டு உள்ளது; அரசு உத்தரவிட்டால் தான் கார்டு தரப்படும்’ என்கின்றனர். கடந்த மாதம் சென்று கேட்டால், தேர்தல் நடத்தை விதியை காரணமாக கூறினர். தேர்தல் முடிந்து விட்டது; எனவே, தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று கார்டு தருமாறு கேட்டால், ‘புதிய கார்டு இனி கிடைக்காது’ என்கின்றனர்.
எனவே, விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுமா அல்லது ரேஷன் கார்டு நிறுத்தப்பட்டு விட்டதா என்பதை அரசு, வெளிப்படையாக தெிரிவிக்க வேண்டும். இதனால், வீண் அலைச்சலும், பணம் விரயமும் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.