பாரதம் முழுவதும் பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வெளி வந்து விட்டது. கல்லூரிகளில் என்ன படிக்கலாம்? எதனைப் படித்தால் என்ன வேலை கிடைக்கும்? எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? உயர் கல்வி வாய்ப்பு இருக்கிறதா? என்றெல்லாம் பெற்றோர்களும், மாணவர்களும் ஒரு தீர்மானத்திற்கு வந்து, விரும்பிய படிப்பு விரும்பிய கல்லூரிகளில் கிடைக்க வேண்டுமே என்ற முனைப்போடு செயல்படும் நேரம் இது.
குறிப்பாக +2வில் அறிவியல் பாடம் படித்த மாணவர்கள் பலரும் விரும்பும் துறை மருத்துவம். எனவே நீட் தேர்வு எழுத தயார் செய்து தேர்வுக்காக காத்திருக்கிறார்கள். மருத்துவம் என்றாலே, எம்.பி.பி.எஸ் மட்டும் தானா? மருத்துவ சேவைக்காக மெடிக்கல் கவுன்சில் என்று ஒன்று இருப்பது போல, மருத்துவத்துறையில் மருத்துவர்களுக்கு தோள் கொடுக்கும் துறைகளான, துணை மருத்துவத்துறைகளுக்கும் சுகாதார தொழில்கள் ஆணையம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது.
அந்த வகையில், பார் புகழும் சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ் பத்ரிநாத் அவர்களின் மூளையில் பிறந்த குழந்தைதான் தி சங்கர நேத்ராலயா அகாடெமி. இதன் மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல் கல்வித்துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் டாக்டர் வந்தனா மேலும் சொல்கிறார். இந்தத் துறையில் நான்கு வருட ”மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல் பட்டப்படிப்பு Bachelor of Medical Lab Science” படிப்பில் மருத்துவ ஆய்வக அறிவியல் (MLS) வல்லுநர்கள் நுண்ணுயிரியல், உயிர்வேதியியல், இரத்தவியல், திசுநோயியல், நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு நோயறிதல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்பின் போதே பயிற்சி பெறுகிறார்கள். எனவே பட்டம் பெற்றவுடன் உடனே ஒரு மருத்துவமனையில், ஒரு ஆய்வுக்கூடத்தில், பணியில் சேரலாம். பட்டப்படிப்பு முடித்தவுடன், அதில் மேலும் சிறப்பு பெற மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல் பட்டமேற்ப்படிப்பு Masters of Medical Lab Science படிக்கலாம்.
கல்வித்தரத்தை முன்னிட்டு, 20 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். தமிழக அரசின் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தேர்வுகளை நடத்தி பட்டம் வழங்குகிறது. முதல் மூன்று ஆண்டுகள் வகுப்பறை மற்றும் ஆய்வுக்கூட பயிற்சி வகுப்புகளும், நான்காவது வருடத்தில் சென்னையின் பிரபல மருத்துவமனைகளில் ஒருவருட வேலை வாய்ப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள மாணவர்களுக்கு நன்கொடையாளர்கள் மூலம் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கு விடுதி வசதியும் கல்லூரி வளாகத்திலேயே வழங்கப்படுகிறது.
நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள் நன்கொடை ஏதும் கிடையாது.