2 ஆண்டுகள் பயங்கரவாத திட்டம்

கார் வெடிவெடிப்பு வழக்கை தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களது விசாரணையில் இந்த பயங்கரவாத சதிச்செயலில் ஈடுபட்டு உயிரிழந்த பயங்கரவாதி ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் ‘ஐ.எம்.ஓ’ எனப்படும் பிரத்யேக செயலியை பயன்படுத்தி பேசிவந்துள்ளான். இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு தனது கூட்டாளிகளுடன் இணைந்து 2 ஆண்டுகளாக திட்டமிட்டு வந்துள்ளான் என தெரியவந்துள்ளது. மேலும், அலைபேசியில் சிம்கார்டுகளை பயன்படுத்தி பேசினால் காவல்துறையிடம் சிக்கிக்கொள்ளலாம் என்பதால் இணைய டேட்டா மூலம் இந்த பிரத்யேக செயலியை பயன்படுத்தி அவன் பேசியுள்ளான். அதிலும் வார்த்தைகளை டைப் செய்யும் சாட் முறைகளை பயன்படுத்தாமல் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் அழைப்புகள் மூலமாக இவர்கள் பேசி வந்துள்ளனர். இவற்றை பதிவு செய்ய முடியாது. மேலும், இந்த கும்பல், பேசியவுடன் அழைப்பு விவரங்களை உடனுக்குடன் அழித்துள்ளது எனவும் கூறப்படுகிறது. வாட்ஸ்அப் அழைப்பு, ஐ.எம்.ஓ போன்ற செயலிகளில் இரு தரப்பினரின் ரகசியம் காக்கப்படும் என்பதாலும், காவல்துறையினரால் கண்காணிக்க முடியாது என்பதாலும் சிறிய குற்றவாளிகள் முதல் பயங்கரவாதிகள் வரை பலரும் இதனையே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது ஆராயத்தக்கது.