2ஜி கொள்ளையை மிஞ்சிய மதுபான கொள்ளை

நாட்டையே உலுக்கிய 2ஜி ஊழலில் அப்பன் அடித்த கொள்ளையை விட, மதுபான கொள்ளையில் மகன் அடித்த கொள்ளை  நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இமாலய  கொள்ளையாகும். டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் சரக்குகளில் சுமார் 60 சதவீதமானவை கணக்கு காட்டாமல் விற்கப்பட்டு, அரசு கஜானவிற்கு செல்லாமல், ஆளும் கட்சியின் குடும்பத்திற்கு செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மத்திய அரசின் கவனத்திற்கு  மேற்படி குற்றச்சாட்டுகள் கொண்டு வந்ததின் அடிப்படையில் கடந்த சில தினங்களாகவே ரெய்டுகள் நடந்தன.   ஒரு வழியாக  அமலாக்க துறையினர் நடத்திய ரெய்டு முடிவுக்கு வந்துள்ளது.

தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக் நிறுவனத்தின் 4,830 சில்லறை கடைகள் மூலம் தினமும் சராசரியாக 150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இத்துடன் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் மது ஆலைகள் என 25க்கும்  மேற்பட்ட  இடங்களில்  அமலாக்கத்துறை  சோதனையை  நடத்தியது.

சென்னை பாண்டிபஜாரில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான தயாரிப்பு நிறுவனமான அக்கார்டு டிஸ்லரிஸ் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. டாஸ்மாக் நிறுவனத்தின் பெரிய சப்ளையரான திமுக முக்கிய புள்ளியின் நெருங்கிய நண்பர் வாசுதேவனின், கால்ஸ் குழுமத்தின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான செங்கல்பட்டு, புதுக்கோட்டை, விழுப்புரம், கோவை மாவட்டங்களில் உள்ள மது ஆலைகளிலும் சோதனை நடந்தது. சென்னை, எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடத்தி, கலால் வரி ஏய்ப்பு தொடர்பாக ஏராளமான ஆவணங்களை அமலாக்க அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதில், கலால் வரி ஏய்ப்பு செய்ததுடன், கொள்முதல் மற்றும் விற்பனையில், பல ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்து இருப்பது தெரிய வருகிறது. குறிப்பாக ஆண்டுக்கு சுமார் ரூ50,000 கோடி  என்றும் கடந்த நான்கு ஆண்டுகளில்  அடித்த கொள்ளை 2 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்றும் ரெய்டு நடத்திய அதிகாரிகள் சூசகமாக தெரிவித்தார்கள். உதாரணமாக ஒரு ஆண்டுக்கு 40 முதல் 50 ஆயிரம் கோடி இலக்கு வைத்து டாஸ்மாக் விற்பனை செய்கிறது. இதில் 60 சதவீதம் கணக்கில் காட்டப்படாமல் விற்கிறார்கள் என்றால் ஒரு வருடத்திற்கு 30 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கிறார்கள்.

மதுபான உற்பத்தி செலவுடன், பாட்டிலின் விலை, மூடியின் விலை, லேபிள் விலை என தனித்தனியாக ஒவ்வொன்றிற்கும் அபரிமிதமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு அவற்றில் கிடைக்கக்கூடிய லாபங்கள் அனைத்தையும் ஆளும் கட்சியின் அரசியல் உயர் மட்டத்தில் இருக்கக்கூடியவர்களே அபகரித்துக் கொள்கிறார்கள். இதன் மூலமாக அரசுக்கும் பேரிழப்பு ஏற்படுகிறது. தோராயமாக மூடி, பாட்டில், லேபிள் முறைகேடுகளால் மட்டுமே ஆண்டுக்கு ரூ 5,000 கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது
தமிழகத்தில் உரிமம் இல்லாமல் ஆயிரக்கணக்கான மதுக்கூடங்கள் சட்ட விரோதமாக ‘மது விற்பனை நிலையங்களாக’ செயல்படுகின்றன. இந்த சட்ட விரோத – உரிமம் பெறாத பார்கள் மூலமாக மட்டும் சராசரியாக ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ரூபாய் பதினைந்து லட்சம் வரையிலும் இடத்திற்கு தகுந்தவாறு கள்ளத்தனமாக மது விற்பனையாகின்றன.

இவ்வித மது விற்பனையில் சராசரியாக தினமும் ரூ 100 கோடிக்கும் மேலாக, ஆண்டொன்றிற்கு ரூ 50,000 கோடி அளவிற்கு அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் கஜானாவுக்குச் சென்று விடுகிறது. இது மெகா ஊழலாகும்.
இதுவரை தமிழகம் காணாத பெரிய அளவிலான ஊழல்கள் ஆகும். வேறெந்த மாநிலங்களிலும் இவ்வளவு அதிகமான அளவுக்கு மதுபான விவகாரங்களில் ஊழல் நடந்திருக்குமா? தெரியாது.  இதுதான் திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய சாதனையாகும்.