கேரள மாநிலம், ஆலப்புழாவில் கடந்த மே 21 அன்று நடைபெற்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) பேரணியில், “ஹிந்துக்கள் தங்கள் இறுதிச் சடங்குகளுக்கு அரிசியை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள், கிறிஸ்தவர்கள் தங்கள் இறுதிச் சடங்குகளுக்கு தூபத்தை தயார்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கண்ணியமாக வாழ்ந்தால், எங்கள் மண்ணில் நீங்கள் வாழலாம், நீங்கள் கண்ணியமாக வாழவில்லை என்றால், எங்களுக்கு ஆசாதி (சுதந்திரம்) தெரியும். கண்ணியமாக, கண்ணியமாக, கண்ணியமாக வாழுங்கள்” என்று ஒரு சிறுவன் கோஷம் எழுப்பினான். அதனை கூட வந்த பலரும் வழி மொழிந்தனர். கேரளாவில் வாழும் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு நேரடியாக விடப்பட்ட இந்த அச்சுறுத்தல் தேசமெங்கும் கடும் அதிர்வலைகலை எழுப்பியது. இது தொடர்பாக, பி.எப்.ஐ மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கோஷமிட்ட அந்த சிறுவனை தோளில் சுமந்து சென்ற ஈரட்டுப்பேட்டையைச் சேர்ந்த அனஸ் என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 153Aன் கீழ் வெறுப்புப் பேச்சு வழக்கில் பி.எப்.ஐ ஆலப்புழா மாவட்டத் தலைவர் நவாஸ் வந்தனம் மற்றும் மாவட்டச் செயலாளர் முஜீப் ஆகியோர் மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கில் மேலும் 18 பேரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் அந்த சிறுவன எழுப்பிய கோஷங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.