மத்தியப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏ.டி.எஸ்) மத்திய உளவு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் போபால் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து தீவிர இஸ்லாமியக் குழுவான ஹிஸ்ப் உத் தஹ்ரிர் (ஹெச்.யு.டி) உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டும் சுமார் 16 இளைஞர்களைக் கைது செய்துள்ளது, மூன்று மாதங்களுக்கும் மேலாக உளவுத்துறையினர் இவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தில் இருந்து 11 பேரும், ஹைதராபாத்தில் இருந்து 5 பேரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முகமது வசீம். இவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த சமூக ஆர்வலரின் மகன் ஆவார். கைது செய்யப்பட்ட 5 பேரில் மூன்று பேர் இஸ்லாம் மதத்திற்கு சமீப காலத்தில் மாறியவர்கள். தவிர, ஒரு பிரபல மருந்தியல் கல்லூரியின் ஆசிரியரும் துறைத் தலைவராக இருப்பவருமான முகமது சலீம் இதில் ஒருவர் என கூறப்படுகிறது. இவர்களைத்தவிர, கைது செய்யப்பட்டவர்களில் ஜிம் பயிற்சியாளர், ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர், தையல்காரர், கணினி தொழில்நுட்ப வல்லுநர், தொழிலதிபர், மென்பொருள் பொறியாளர் ஆகியோரும் அடங்குவர். அவர்கள் வனப் பகுதிகளில் ரகசிய போர்ப் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தனர், இதற்காக ஹைதராபாத்தில் இருந்து திறமையான பயிற்சியாளர்களை அவர்கள் பணியமர்த்தியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தவிர, மதக் கூட்டங்களில் ஆத்திரமூட்டும் பேச்சுகளை வழங்குவதும், அதிகமான இளைஞர்களுக்கு சமய இலக்கியங்களை விநியோகிப்பதும் இவர்களின் வழக்கம். அவர்கள் தொடர்புகொள்வதற்கு வழக்கமான தகவல்தொடர்பு சேனல்களைத் தவிர்த்தனர். தங்கள் உரையாடலுக்கு டார்க் வெப் தளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த கைது நடவடிக்கையின்போது, ஆத்திரமூட்டும் இலக்கியங்கள், பணம், 12க்கும் மேற்பட்ட அலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்றால் என்ன? ஏற்கனவே 16 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற இந்த அமைப்பு, 1952ம் ஆண்டு ஜெருசலேமில் நிறுவப்பட்டது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு, மத்திய ஆசியா, ஐரோப்பா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் குறிப்பாக இந்தோனேசியாவில் கிளைகளைக் கொண்டு பெரும் செல்வாக்குடன் திகழ்கிறது. பல்வேறு விசாரனை அமைப்புகளின் கூற்றுப்படி, ஹிஸ்ப் உத் தஹ்ரிர் தனது சித்தாந்தத்தைப் பரப்புவதில் உலகளாவிய விசாரணை அமைப்புகளை சாமார்த்தியமாக தவிர்த்து வருகிறது. உலகளாவிய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைவிட ஆபத்தான பயங்கரவாதக் குழுவாக மாறி வருகிறது. பாரதம், இந்த அமைப்பின் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து உலகளாவிய பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து உள்ளீடுகளைக் ஏற்கனவே பெற்றுள்ளது. சுமார் 50 நாடுகளில் இந்த பயங்கரவாத மைஅப்பு தனது ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ளது. தனி ஆயுதப் பிரிவையும் கொண்டுள்ளது. அது அதன் பணியாளர்களுக்கு ரசாயன, பாக்டீரியாவியல் மற்றும் உயிரியல் போர்களில் பயிற்சி அளிக்கிறது. பாரதத்தில் ஜனநாயக அமைப்பைக் கவிழ்த்து அதற்கு பதிலாக ஷரியா (இஸ்லாமிய சட்ட ஆட்சி) கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பீதியை உருவாக்க, நெரிசலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களைச் செய்ய பாரதத்தின் பெரிய நகரங்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.